போயஸ் கார்டன் சென்ற ஓபிஎஸ் இளைய மகன்.. ஜெயவேதாவிற்கு நகை அணிவித்து வாழ்த்திய ஜெயபிரதீப்.. வைரல் போட்டோ.!
ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அவருடைய இளைய மகன் ஜெயபிரதீப் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று அவரை திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபா;- தங்கள் மகளின் பெயர்சூட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பிதழ் வழங்க வந்ததாக கூறினார். இது அரசியல் சார்ந்த சந்திப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் ஓபிஎஸ் தேனி சென்றுவிட்ட நிலையில்அவருக்கு பதிலாக இளைய மகன் ஜெயபிரதீப் மற்றும் அவரது மனைவி கலந்துகொண்டு குழந்தைக்கு தங்க நகை அணிவித்து மகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உடன்பிறந்த சகோதரர் தெய்வத்திரு ஜெ.ஜெயகுமார் - விஜயலட்சுமி அம்மையார் அவர்களின் தவப்புதல்வி அருமை அக்கா ஜெ. தீபா மற்றும் மாதவன் பொன்மகள் ஜெயவேதாவின் பெயர் சூட்டும் விழா இன்று போயஸ் தோட்டம் வேதா இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்து கொண்டு அன்பு குழந்தை ஜெயவேதாவிற்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓ. பன்னீர்செல்வம் சார்பாக வாழ்த்தி ஆசிர்வாதம் வழங்கி மகிழ்ச்சி அடைந்தேன்.
அன்பு குழந்தை ஜெயவேதா, எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடனும் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓ. பன்னீர்செல்வம் நல்லாசியுடனும் தமிழக மக்களின் பேராதரவுடனும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உண்மை தொண்டர்களின் நல்வாழ்த்துக்களுடனும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.