- Home
- Politics
- ரூ.2000 கோடி சொத்து... டெல்லியின் ஸ்கெட்ச்..! களமிறங்கும் சசிகலா! பாஜக-அதிமுகவின் மாஸ்டர் ப்ளான்..!
ரூ.2000 கோடி சொத்து... டெல்லியின் ஸ்கெட்ச்..! களமிறங்கும் சசிகலா! பாஜக-அதிமுகவின் மாஸ்டர் ப்ளான்..!
ஒருங்கிணைந்த அதிமுகவை வைத்துதான் திமுகவை வீழ்த்த முடியும் என கணக்கு போடுகிறார்கள். ஜெயலலிதா இடத்திற்கு சசிகலா வரக்கூடாது என தடுத்த பாஜகவே, இப்போது திமுகவை வீழ்த்த சசிகலாவின் குரலும் தேவை என்ற நிலைக்கு வந்துவிட்டது.

2026 சட்டமன்றத்தேர்தல் மு.க.ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கான தேர்தல். இதை நோக்கியே எதிர்கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. ஆட்சியைக் கைப்பற்ற அதிமுக- பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று சசிகலா. அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் என்கிற ஆசை இருந்த சசிகலாவை தனது அரசியல் நகர்வால் ஓரங்கட்டினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சசிகலா சார்ந்த சமூகம் தற்போது வரை அதை ரசிக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக வருகிற 2026 தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டங்களில் சசிகலாவை பிரச்சாரம் செய்ய வைக்கலாம் என்கிற முயற்சிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் நேரடியாக சசிகலாவிடம் பேசி இருக்கிறார். இந்த வியூகத்திற்கு எடப்பாடி பழனிசாமியும், டெல்லியும் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சரி, எடப்பாடி முதலமைச்சரானால் சசிகலாவிற்கு என்ன லாபம்? என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. சசிகலாவை பொருத்தவரை அவருக்கு சொந்தமான 2000 கோடி சொத்தை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. அத்தோடு தனது பினாமிகளிடமும் பல கோடி ரூபாய் சொத்துக்களை சசிகலா குடும்பம் வைத்துள்ளதாக தெரிகிறது. இதையெல்லாம் மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்றால் அதற்கு அதிகாரப்பலம் தேவை. எனவே தனது சொத்து, தன் மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர பாஜகவின் தயவு சசிகலாவுக்கு நிச்சயம் தேவைப்படும்.
மாநிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க அதிமுக தேவைப்படும். இதனால் அதிமுக பாஜக கூட்டணி சசிகலாவிற்கு அவசியமாகிறது. சரி, சசிகலாவின் ஆதரவு எடப்பாடிக்கு ஏன் தேவைப்படுகிறது? முதல் விஷயம் முக்குலத்தோர் வாக்குகள். தென் மண்டலங்களில் அசைக்க முடியாத சமுதாயமாக இருக்கிறது முக்குலத்தோர் சமூகம். ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்தது தென்மண்டலம். ஜெயலலிதாவே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டதற்கு ஒரு முக்கியமான காரணமும் இதுதான். ஜெயலலிதா தனக்கு அடுத்தபடியாக ஓ.பன்னீர் செல்வத்தை வைத்திருந்தார் என்பதையும் அந்த சமூகம் இன்று வரை மறக்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த நேரத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அந்த சமுதாயத்தை சீற்றம் கொள்ள வைத்தது. இருந்தபோதும் 10.5% வன்னியர் உள்ஒதுக்கீடுகூட எடப்பாடி பழனிசாமிக்கு பலனை தரவில்லை. அதிமுகவின் வன்னியர் சமூக முகமாக இருக்கும் சி.வி சண்முகமே விழுப்புரம் தொகுதியில் தோற்றுப் போனார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தென்மண்டல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. முக்குலத்தோர் சமூக மக்களும் எடப்பாடி பழனிசாமியை எதிரி சக்தியாக பார்க்க தொடங்கினர்.
இதற்காகத்தான் அந்த சமுதாயத்தை சேர்ந்த திருமங்கல சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இருந்தாலும்கூட தென் மாவட்டங்களில் அதிருப்தி குறைந்தபாடில்லை. இதனால்தான் சசிகலாவின் ஆதரவு எடப்பாடிக்கு தேவைப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவை வைத்துதான் திமுகவை வீழ்த்த முடியும் என கணக்கு போடுகிறார்கள். ஜெயலலிதா இடத்திற்கு சசிகலா வரக்கூடாது என தடுத்த பாஜகவே, இப்போது திமுகவை வீழ்த்த சசிகலாவின் குரலும் தேவை என்ற நிலைக்கு வந்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து நேரடியாக சசிகலா பிரச்சாரம் செய்யாவிட்டாலும், ஜெயலலிதாவின் சின்னமான இரட்டை இலைக்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என மக்களிடம் அவர் கேட்பார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.