Parenting Tips : குழந்தை தூக்கத்தில் புலம்புறாங்களா? இதை முதல்ல சரி பண்ணுங்க!!
குழந்தைகள் தூங்கும் போது பேசினால் சில விஷயங்களை பெற்றோர் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

Child Sleep Talking Causes
குழந்தைகள் நன்றாக தூங்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர். படுக்க வைத்ததும் குழந்தைகள் நன்றாக தூங்குவது போல தோன்றினாலும் நள்ளிரவில் சில குழந்தைகள் புலம்பும் பழக்கத்தை கொண்டுள்ளனர். தூங்கும் போது குழந்தைகள் பேசுவது பெற்றோருக்கு குழப்பத்தை தரலாம். இந்த பதிவில் குழந்தைகள் ஏன் தூங்கும் போது பேசுகிறார்கள் என்பது குறித்து காணலாம்.
மன அழுத்தம்
குழந்தைகள் தூங்கும் போது பேசுவது இயல்பான விஷயம்தான் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பயப்பட தேவையில்லை. பெரியவர்களுக்கு எப்படி சில விஷயங்களில் குழப்பங்களும் மன அழுத்தமும் ஏற்படுகிறது. அதேபோல குழந்தைகளுக்கும் கூட ஏற்படும். பள்ளியில் ஏற்படுகின்ற சச்சரவுகள், வீட்டில் உள்ள தகராறு போன்றவை குழந்தைகளை கவலை அடைய செய்யலாம். இதன் வெளிப்பாடாக அவர்கள் தூக்கத்தில் பேசக்கூடும்.
உற்சாகம்
உற்சாகமும் கூட குழந்தைகள் தூக்கத்தில் பேசுவதற்கு காரணமாக இருக்கும். வீட்டில் ஏதேனும் விசேஷங்கள், சுற்றுலா போன்றவை திட்டமிடுவது குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி உற்சாகத்தை தரும். இதனால் தூக்கத்தில் ஆனந்த உணர்வில் பேசலாம்.
உடல்நல பாதிப்பு
சில குழந்தைகள் உடல் ரீதியாக ஏதேனும் பாதிப்புக்கு உள்ளாகும் போது தூக்கத்தில் பேசுவார்கள். காய்ச்சல் போன்ற தீவிரமான தொற்று நோய்கள் குழந்தைகளை தூக்கத்தில் புலம்ப வைக்கும்.
போதுமான தூக்கமின்மை
சில குழந்தைகளுக்கு போதுமான உறக்கம் கிடைப்பதில்லை. அவர்கள் பகலில் ஓடியாடி விளையாடி சுறுசுறுப்பாக இருப்பார்கள். இரவில் அதற்கு ஏற்ற ஓய்வு அவர்களுக்கு தேவை. முறையாக ஓய்வெடுக்காமல் போதுமான தூக்கம் இல்லாத குழந்தைகள் நள்ளிரவில் தூக்கத்தில் பேசும் வாய்ப்பு உள்ளது.
பரம்பரை பழக்கம்
குழந்தைகள் தூக்கத்தில் பேசுவதற்கு மரபியல்ரீதியான காரணங்களும் இருக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் பெற்றோர் அல்லது முன்னோர் தூக்கத்தில் பேசும் பழக்கம் உடையவராக இருந்தால் இது மரபு ரீதியாக குழந்தைகளுக்கு கடத்தப்படும்.
கவனிக்க வேண்டிய மாற்றம்
குழந்தைகள் தூக்கத்தில் பேசும் போது பெற்றோர் கவலைப்பட வேண்டியது இல்லை என்றாலும், அவர்கள் அடிக்கடி தூக்கத்தில் பேசினால் கவனிக்க வேண்டிய விஷயமாகும். தூக்கத்தில் சத்தமாக பேசுவது, கத்துவது, அடிக்கடி பயந்து விழிப்பது போன்றவை கவனிக்க வேண்டிய அறிகுறிகள். தொடர்ந்து இது மாதிரி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
பெற்றோர் செய்ய வேண்டியது:
குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைப்பது பெற்றோர்களின் கடமையாகும். குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் கிடைத்தால் அவர்களுடைய வளர்ச்சி மேம்பாடு அடையும். அது மட்டுமின்றி கல்வியும் நன்கு கற்க முடியும். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் பள்ளியில் மந்தமாக காணப்படுவார்கள். தூக்கத்தில் பேசும் பழக்கமும் ஏற்படாது.
குழந்தைகள் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டியது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு தேவையான அடிப்படை விஷயமாகும். இதை கட்டாயம் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் குழந்தைகளை தூங்க வைப்பதும் காலையில் சரியான நேரத்தில் எழுப்புவதும் அவர்களுடைய தூக்க சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. குழந்தையாக இருக்கும்போது அவர்களுக்கு முறையான தூக்க சுழற்சியை வழக்கப்படுத்துவது எதிர்காலத்திலும் நன்மை பயக்கும்.