- Home
- Lifestyle
- Face Shape vs Personality : முக வடிவமைப்பை வைத்தே உங்கள் ஆளுமையை சொல்ல முடியும்..இத தெரிஞ்சுக்கோங்க
Face Shape vs Personality : முக வடிவமைப்பை வைத்தே உங்கள் ஆளுமையை சொல்ல முடியும்..இத தெரிஞ்சுக்கோங்க
உங்கள் முகத்தின் வடிவமைப்பை வைத்து உங்கள் குணாதிசயங்கள் என்ன என்பதை கூறி விட முடியும். இதற்கு முகம் பார்த்தல் அல்லது முக வாசிப்பு என்று பெயர்.

You can tell your personality by your facial features
இந்த பழக்கமானது சீன ஜோதிடம், கிரேக்க தத்துவம் மற்றும் இந்திய சாமுத்திரிகா லட்சணம் போன்ற பல கலாச்சாரங்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இந்த முறைகளின் படி ஒருவரின் முகம், கண்கள், மூக்கு, வாய், நெற்றி, தாடை போன்ற பல்வேறு அம்சங்களும் அவரது ஆளுமைகளை பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் அவர்களது எதிர்காலத்தை கூட பிரதிபலிக்கும் என நம்பப்படுகிறது. முக அமைப்புக்கும் குணாதிசயங்களுக்கும் இடையிலான பொதுவான தொடர்பு குறித்த சில நம்பிக்கைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இவை பொதுவான கருத்துக்களே தவிர, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முக அமைப்பும், ஆளுமைகளும்
வலுவான தாடை மற்றும் அகலமான நெற்றியுடன் கூடிய சதுர வடிவிலான முக அமைப்பு கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தும், உறுதியான லட்சியம் கொண்ட தலைமை குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் சவால்களை எதிர்கொள்ள அஞ்சுவதில்லை. வட்டமுகம் கொண்டவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், மென்மையான அனைவரிடமும் நட்பு பாராட்டும் நல்ல இதயம் கொண்டவர்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் மற்றவர்களுடன் உறவுகளைப் பேணுவதில் வல்லவர்கள். நீண்ட அல்லது செவ்வக முகம் கொண்டவர்கள் பொதுவாக சிந்தனையாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் ஒரு விஷயத்தை பகுப்பாய்வு செய்து அதன் பின்னரே தெளிவு பெறுவர். இவர்கள் நடைமுறைவாதிகள் என்று கருதப்படுகின்றனர். அமைதியாகவும் அதே சமயம், சுய ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்பாகவும் இருப்பார்கள்.
முகத்தின் வடிவத்தை வைத்தே ஆளுமையை கூற முடியும்
கூர்மையான தாடையும் அகன்ற நெற்றியும் கொண்ட முக்கோண வடிவிலான முகம் கொண்டவர்கள் பெரும்பாலும் கலைமீது ஆர்வம் கொண்டவர்கள். புதிய படைப்புகளை படைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகள் என்றே நம்பப்படுகிறது. நுட்பமான உணர்வுகளை கொண்டிருப்பார்கள். வைர வடிவிலான முகம் அகன்ற கன்னத்தில் எலும்புகளும் குறுகிய நெற்றியும் தாடையும் கொண்டவர்களாக இவர்கள் விளங்குகின்றனர். இவர்கள் துல்லியமானவர்களாகவும், தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவர்களாகவும் உள்ளனர். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற எண்ணமும், கட்டுப்பாடும் இவரிடம் அதிகம் உண்டு. இவர்கள் ஒரு விஷயத்தை விவரமாக அறிந்து கொள்வதில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கண்களை வைத்து குணங்களை சொல்ல முடியும்
ஒருவரின் கண்களை வைத்தும் குணாதிசயத்தை சொல்ல முடியும் என சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. பெரிய கண்கள் உடையவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், வெளிப்படை தன்மையுடனும், படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிறிய கண்கள் உடையவர்கள் புத்திசாலிகளாகவும், கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். ஆழமான கண்கள் கொண்டவர்கள் சிந்தனையாளர்களாகவும், தீவிரமான நுட்பமான உணர்வுகளை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அகலமான கண்களைக் கொண்டவர்கள் பரந்த மனப்பான்மையுடன் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். நெருக்கமான கண்கள் கொண்டவர்கள் குறிப்பிட்ட விஷயங்களில் ஆழமாக சிந்தித்து, கவனமாக முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள்.
அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை
சாமுத்திரிகா லட்சணத்தின் படி ஒருவரின் முகம் மற்றும் கண்கள் மட்டுமல்லாமல் புருவங்கள், மூக்கு, வாய், உதடு, நெற்றி, தாடை ஆகியவற்றை வைத்தும் குணாதிசயங்களை கூற முடியும். ஆனால் முக அமைப்புகளுக்கும் குணாதிசயங்களுக்கும் நேரடியான அறிவியல் பூர்வமான தொடர்பு இல்லை. முக அமைப்பு அடிப்படையிலும் ஒருவரை மதிப்பிடுவது பாரபட்சத்திற்கு வழி வகுக்கலாம். ஒருவரின் முகம் என்பது உடல் நலம், வயது, அவர்களின் வாழ்க்கை முறை, மற்றும் பிற உணர்ச்சிகளால் மாறக்கூடும். ஒருவரின் குணாதிசியம் என்பது பல காரணிகளின் விளைவாகும். அவர்களின் வளர்ப்பு, அவர்கள் கடந்து வந்த பாதை, சூழல் ஆகியவை ஒருவரின் குணாதிசயத்தை நிர்ணயிக்கின்றன. முக அமைப்பு என்பது அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே.
உருவத்தை வைத்து முடிவெடுத்து விடாதீர்கள்
முக அமைப்பை வைத்து ஒருவரின் குணாதிசயத்தை பற்றிய சுவாரஸ்யமான சில குறிப்புகளை கொடுக்கலாம். ஆனால் இவை பொதுவெளியில் கிடைக்கும் பொதுவான தகவல்களேத் தவிர ஒருவரை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களுடைய செயல், பேச்சு, சிந்தனை, அனுபவங்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் விதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்துமே ஒருவரின் ஆளுமையை முழுமையாக உணர வைக்கும். முக அமைப்பை வைத்து ஒருவரை குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ மதிப்பிடுதல் என்பது கூடாது.