- Home
- Lifestyle
- Varicose Veins remedy : காலில் நரம்பு சுருள் (வெரிகோஸ்) பிரச்சனையா? இதோ எளிய வீட்டு மருத்துவம்
Varicose Veins remedy : காலில் நரம்பு சுருள் (வெரிகோஸ்) பிரச்சனையா? இதோ எளிய வீட்டு மருத்துவம்
தற்போதைய காலத்தில் பலருக்கும் காலில் நரம்பு சுருள் (வெரிகோஸ்) பிரச்சனை ஏற்படுகிறது இதற்கு வீட்டிலேயே சில மருத்துவ முறைகளை நாம் பின்பற்றலாம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Varicose Problem Home Remedy in Tamil
வெரிகோஸ் பிரச்சனை ஒரு தீவிர நிலையாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் சுருள்களால் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செலுத்த முடியாமல் மாரடைப்பு அபாயம் ஏற்படுகிறது. கால்களில் வலி, கனமான உணர்வு, வீக்கம், சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம், கால்களில் தெரியும் ஊதா அல்லது சிகப்பு நரம்புகள் வெரிகோஸ் வெயின் பிரச்சனையில் அறிகுறிகள் ஆகும். இதை கட்டுப்படுத்துவதற்கான எளிய மருத்துவ குறிப்புகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
வெரிகோஸ் பிரச்சனை உள்ளவர்கள் செய்ய வேண்டியவை
வெரிகோஸ் வெயின் பிரச்சனையை தடுப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது உடற்பயிற்சி மட்டுமே. தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யக்கூடாது. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜாக்கிங் போன்றவற்றை செய்யலாம். இவை ரத்தநாளங்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், நரம்பு சுருள் பிரச்சனை வராமல் தப்பிக்க முடியும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். சால்மன் மீன், ஆளி விதைகள், வால்நட், கானாங்கெளுத்தி மீன் போன்றவற்றையும் கீரைகள், பாதாம், வெள்ளரி விதைகள் போன்ற நட்ஸ்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
வெரிகோஸ் பிரச்சனை உள்ளவர்கள் செய்யக் கூடாதவை
சோடியம் நிறைந்த உணவுகள் வீக்கத்தை மேலும் அதிகப்படுத்தலாம். எனவே சோடியம் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் போன்ற உணவுகளையும், பதப்படுத்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் ஆகியவை வெரிகோஸ் பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே இந்த பழக்கங்களை கைவிட வேண்டியது அவசியம். கால்களை இறுக்கும் வகையில் சாக்ஸ் அணிவது, பிற உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். அசௌகரியமாக உணர்பவர்கள் கற்றாழை ஜெல்லை தடவி வரலாம். கற்றாழை வீக்கம் மற்றும் அசௌகரியத்தை குறைக்கும் பண்புகள் கொண்டது.
முருங்கைப்பட்டை பற்று
வெரிகோஸ் பிரச்சனை இருப்பவர்கள் முருங்கை மரப்பட்டையுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து வலி அல்லது வீக்கம் உள்ள இடத்தில் பற்றிட வேண்டும். காய்ந்த பின்னர் வெந்நீர் கொண்டு துடைத்து விட வேண்டும். இதன் மூலமாக வெரிகோஸ் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும். இதைத் சில நாட்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது நரம்பு சுருள் பிரச்சனை குறைவதை உங்களால் கண்கூடாக காண முடியும். கால்களை நன்றாக கழுவியப் பின்னர், சிறிது நேரம் இதயத்தின் மட்டத்திற்கு மேல் உயர்த்தி வைக்க வேண்டும். இது கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. காலையில் அல்லது இரவு தூங்குவதற்கு முன்னர் சில நொடிகள் இந்த பயிற்சியை முயற்சி செய்யலாம்.
நல்லெண்ணெய் தைலம்
வெரிகோஸ் பிரச்சனையை சரி செய்ய மற்றொரு எண்ணெயையும் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் - 100 மி.லி, சீரகம் - 4 சிட்டிகை, மஞ்சள் தூள் - 2 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். மஞ்சளின் நிறம் மாறி கலவை சற்று இறுகி வரும் வரை சூடு படுத்தி அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்னர் இதை இறக்கி ஆறவைத்து வடிகட்டி சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும். தேவைப்படும் பொழுது இந்த எண்ணெயை வெரிகோஸ் வெயின் இருக்கும் பகுதிகளில் மேலிருந்து கீழாக மெதுவாக தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர சுருண்டு கொண்ட நரம்புகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதை காணலாம்.
மருத்துவ ஆலோசனை தேவை
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நோயின் தீவிரத்தை குறைக்க உதவும். நல்லெண்ணெய் மற்றும் சீரகத்தின் குணப்படுத்தும் தன்மைகளும் வெரிகோஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வை தரும். இது ஒரு வீட்டு வைத்தியம் மட்டுமே. நோயின் தீவிரம் அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ வேலை பார்ப்பவர்களுக்கும் அதிக உடல் பருமன் மற்றும் பிற காரணங்களாலும் வெரிகோஸ் வெயின் ஏற்படுகிறது. இந்த மருத்துவ முறைகள் வெரிகோஸ் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வை தந்துவிடும் எனக்கூற முடியாது. கால்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இது பின்னாளில் மிகப்பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.