- Home
- Lifestyle
- Money Saving Tips: மாதம் ரூ.5,000 வரை மிச்சப்படுத்தலாம்..இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய ஷாப்பிங் டிப்ஸ்!
Money Saving Tips: மாதம் ரூ.5,000 வரை மிச்சப்படுத்தலாம்..இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய ஷாப்பிங் டிப்ஸ்!
Money Saving Tips: ஷாப்பிங் செலவை குறைத்து மாதம் ரூ.5,000 வரை சேமிக்க உதவும் எளிய பழக்கங்கள் என்ன? ஆஃபர், ஆன்லைன் ஷாப்பிங், மளிகை செலவில் பணத்தை மிச்சப்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய ஷாப்பிங் டிப்ஸ்!
கடைக்கு போனால் தேவையானதை மட்டும் வாங்கிட்டு வருவேன் என்று நினைத்துதான் பலரும் வீட்டை விட்டு கிளம்புவார்கள். ஆனால், கடைக்குள் சென்ற சில நிமிடங்களில் பட்டியலில் இல்லாத பொருட்களும் கூடைகளில் சேர்ந்துவிடும்.
இது ஆஃபர்..அது குறைந்த விலை..இதை வாங்காம விட்டுட்டா நஷ்டம் என்று நினைத்து வாங்கிய பொருட்கள், மாத இறுதியில் கணக்குப் பார்த்தால் பெரிய தொகையாக மாறியிருக்கும்.
குறிப்பாக குடும்பத்தின் அன்றாட செலவுகளை கவனிக்கும் இல்லத்தரசிகளுக்கு சமையல் பொருட்கள், மளிகை, அழகு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள் என சிறுசிறு செலவுகள் தொடர்ந்து இருக்கும்.
இதில் சில எளிய ஷாப்பிங் பழக்கங்களை மாற்றினாலே, தேவையில்லாத செலவுகளை குறைத்து மாதம் ரூ.5,000 வரை சேமிக்க வாய்ப்பு இருக்கிறது. அது எப்படி என்று பார்ப்போம்.
கடைக்கு செல்லும் முன் பட்டியல் தயாரியுங்கள்
கடைக்கு கிளம்பும் முன் இந்த ஒரே ஒரு பழக்கத்தை கடைப்பிடித்தாலே போதும். தேவையில்லாத பொருட்களுக்கு செலவாகும் பணத்தை கணிசமாக குறைக்கலாம்.
ஷாப்பிங் செல்வதற்கு முன் முதலில் வீட்டில் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை ஒருமுறை பாருங்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள் முதல் சோப்பு, துணி துவைக்கும் பொடி வரை எது இருக்கிறது, எது உண்மையாகவே தேவைப்படுகிறது என்பதைச் சரிபார்த்து உண்மையில் தேவையானவற்றை மட்டும் எழுதுங்கள்.
ஆனால், கடைக்குள் சென்றவுடன் அழகான பேக்கிங், சிறப்பு சலுகை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற அறிவிப்புகள் கண்ணில் பட்டதும், இது கூட வாங்கலாமே என்ற எண்ணம் வரலாம்.
இந்த தருணத்தில்தான் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- இந்தப் பொருள் என் பட்டியலில் இருக்கிறதா?
- வீட்டில் ஏற்கனவே இருக்கிறதா?
இப்போது உண்மையிலேயே தேவையா? என்ற மூன்று கேள்விகளை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்.
தேவையில்லை என்றால், அதை அங்கேயே விட்டுவிட்டு அடுத்த பொருளுக்குச் செல்லுங்கள். இந்தச் சிறிய பழக்கம், ஆசைக்காக வாங்கும் பொருட்களைக் குறைத்து, தேவைக்காக மட்டும் செலவு செய்ய உதவும்.
பசி கட்டுப்பாட்டில் இருந்தால்.. ஷாப்பிங் செலவும் கட்டுப்பாட்டில் இருக்கும்
சின்ன விஷயம்தானே என்று நினைக்கிறீர்களா? ஆனால் ஷாப்பிங் செலவை மெதுவாக உயர்த்தும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.
பசியுடன் மளிகைக் கடை அல்லது பல்பொருள் அங்காடிக்குள் சென்றால், முதலில் கண்களில் படுவது தேவையான பொருட்கள் அல்ல. சாக்லேட், பிஸ்கட், சிப்ஸ், இனிப்பு, குளிர்பானம் போன்ற உடனடி ஆசையைத் தூண்டும் பொருட்களாகத்தான் இருக்கும்.
இதையும் வாங்கிக்கலாம், குழந்தைகளுக்கு பிடிக்கும், ஆஃபர் இருக்கே என்று ஒவ்வொரு சிறு பொருளாக கூடையில் சேர்க்கத் தொடங்கினால், கடைசியில் பில் தொகை எதிர்பார்த்ததைவிட அதிகமாகிவிடும்.
அதனால், ஷாப்பிங் செல்லும் முன் வீட்டிலேயே வயிறார சாப்பிட்டுவிட்டு கிளம்புங்கள். பசி இல்லாமல் கடைக்குள் சென்றால், தேவையானதை மட்டும் வாங்க வேண்டும் என்ற முடிவில் கவனம் செலுத்துவது சுலபமாக இருக்கும். சிறுசிறு தேவையற்ற வாங்குதல்கள் குறைந்தாலே, மாத இறுதியில் சேமிக்கப்படும் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.
ஆஃபரைப் பார்த்து வாங்காதீர்கள்..தேவையைப் பார்த்து வாங்குங்கள்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி, மெகா ஆஃபர் என்று கடையில் வைக்கப்பட்டிருக்கும் வாசகங்கள் நம்மை ஈர்க்காமல் இருக்காது. ஆனால், அந்தச் சலுகை உண்மையில் நமக்கு சேமிப்பைத் தருகிறதா என்பதுதான் முக்கியம்.
கண்ணில் பட்டதும் உடனே கூடையில் போடுவதற்கு முன், இந்தப் பொருள் எனக்கு உண்மையிலேயே தேவையா? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.
தேவை இருக்கிறது என்றால் சலுகையைப் பயன்படுத்தலாம். ஆனால் தேவையே இல்லாத ஒரு பொருளை 50 சதவீதம் தள்ளுபடியில் வாங்கினாலும், அது 50 சதவீதம் சேமிப்பு அல்ல. தேவையில்லாமல் செலவழித்த பணம்தான்.
பெரிய பாக்கெட் எப்போதும் சிக்கனம் இல்லை
அதிகமாக வாங்கினால் அதிகமாக சேமிக்கலாம் என்று நினைத்து பெரிய அளவிலான பொருட்களை வாங்குவது நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம். ஆனால், அந்தப் பொருள் பயன்படுத்தப்படாமல் கிடந்து வீணாகிவிட்டால் நாம் நினைத்த சேமிப்பு அப்படியே செலவாக மாறிவிடும்.
குறிப்பாக மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், ஸ்நாக்ஸ் போன்றவற்றை வாங்கும்போது இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
அதனால், எது குறைந்த விலை? என்பதைவிட எவ்வளவு உண்மையில் பயன்படுத்துவோம்? என்பதைக் கணக்கிடுங்கள். வீட்டில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு அல்லது பிற உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தோராயமாக கணக்கிட்டு, அதற்கேற்ற அளவில் வாங்குவது நல்லது.
பெரிய பாக்கெட் என்றாலே பெரிய சேமிப்பு கிடையாது. முழுமையாகப் பயன்படுத்தப்படும் அளவுதான் உண்மையான சேமிப்பு.
வீட்டில் இருப்பதை முதலில் பயன்படுத்துங்கள்
அடடா..இது ஏற்கனவே வீட்டில் இருக்கிறதே என்று ஷாப்பிங் முடித்த பிறகுதான் உணர்ந்திருக்கிறீர்களா?
புதிய பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும் முன், முதலில் சமையலறை அலமாரி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் சேமிப்பு இடங்களை ஒரு முறை பாருங்கள். ஏற்கனவே இருக்கும் பொருட்கள் கண்ணில் படாமல், அதே பொருளை மீண்டும் வாங்கிவிடுவது நமக்கே தெரியாமல் நடக்கலாம்.
ஒரே பொருளை இரண்டு அல்லது மூன்று முறை வாங்கிவிட்டு, பின்னர் பயன்படுத்தாமல் வைத்திருப்பது பணத்தையும், இடத்தையும் வீணாக்கும். அதிலும் காலாவதியாகக்கூடிய பொருட்களாக இருந்தால், செலவு இன்னும் வீணாகிவிடும்.
புதியதை வாங்குவதற்கு முன் வீட்டில் இருப்பதைத் தேடிப் பாருங்கள். அந்தச் சிறிய பழக்கமே மாதச் செலவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்கில் கார்ட்டில் போட்டு காத்திருங்கள்
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது ஒரு 24 மணி நேர விதியை பின்பற்றிப் பாருங்கள்.
பிடித்த பொருளை வாங்க உடனே பணம் செலுத்தாமல், கார்ட்டில் சேர்த்து வைத்துவிட்டு 24 மணி நேரம் காத்திருக்கலாம். மறுநாளும் அந்தப் பொருள் உண்மையிலேயே தேவை என்று தோன்றினால் மட்டும் வாங்குங்கள்.
இந்த இடைவெளியில், இது எனக்கு உண்மையிலேயே தேவையா? வீட்டில் இதற்கு மாற்றாக ஏதாவது இருக்கிறதா? இப்போது வாங்காவிட்டால் என்ன ஆகிவிடும்? என்று உங்களுக்குள் கேளுங்கள்.
பல நேரங்களில், சில மணி நேரம் கழித்து பார்த்தால் அப்போது பிடித்தது இப்போது வேண்டாம் என்ற எண்ணம் வரலாம்
மாதாந்திர செலவு வரம்பு வைத்துக்கொள்ளுங்கள்
சின்னச் சின்ன செலவுதானே என்று நினைத்துக்கொண்டே போனால், மாத இறுதியில் பெரிய தொகை காணாமல் போயிருக்கும். இதைத் தவிர்க்க, ஷாப்பிங்கிற்கே ஒரு சிறிய பட்ஜெட் வைத்துக்கொள்ளலாம்.
மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தனிப்பட்ட தேவைகள் என ஒவ்வொரு பிரிவுக்கும் மாதாந்திர செலவு வரம்பை முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த வரம்புக்குள் தேவையானதை மட்டும் தேர்வு செய்வது, கடையில் கண்ணில் படும் ஒவ்வொரு பொருளையும் வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
ஷாப்பிங்கிற்கு வரம்பு வைத்தால், ஆசைக்கும் ஒரு பிரேக் போடலாம். சேமிப்புக்கும் ஒரு வழி உருவாகும்.
விலையை ஒப்பிட்டு வாங்குங்கள்
இங்கே ரூ.100 அங்கே ரூ.80 என்று விலை குறைவாக இருப்பதைப் பார்த்தவுடன் உடனே வாங்கிவிடுகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். ஒரே பொருளுக்கு வெவ்வேறு இடங்களில் விலை மாறுபடுவது வழக்கம். ஆனால், குறைந்த விலைதான் எப்போதும் குறைந்த செலவு என்று அர்த்தமில்லை.
ஒரே பொருளை வாங்குவதற்கு முன், அருகிலுள்ள கடை, பல்பொருள் அங்காடி மற்றும் ஆன்லைன் தளங்களில் விலையை ஒருமுறை ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஆனால், விலை மட்டும் போதாது. பாக்கெட்டில் உள்ள அளவு எவ்வளவு, பொருளின் தரம் எப்படி, ஆன்லைனில் விநியோகக் கட்டணம் சேர்கிறதா, சலுகைக்கு ஏதேனும் நிபந்தனைகள் உள்ளனவா என்பதையும் கவனியுங்கள்.
விலை ஒப்பிடுங்கள்.. ஆனால் முழு செலவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் ஷாப்பிங்கில் உண்மையான சேமிப்பு கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

