- Home
- Lifestyle
- Mixie jar Cleaning : மிக்சி ஜாரின் பின்புறம் இப்படி கருப்பாக இருக்கா? பளபளன்னு சுத்தம் செய்யும் ஈஸி வீட்டு டிப்ஸ்!
Mixie jar Cleaning : மிக்சி ஜாரின் பின்புறம் இப்படி கருப்பாக இருக்கா? பளபளன்னு சுத்தம் செய்யும் ஈஸி வீட்டு டிப்ஸ்!
Mixie jar Cleaning : மிக்சி ஜாரின் பின்புறம் படிந்த எண்ணெய் பிசுக்கு, மசாலா கறை, தூசியை எளிதாக நீக்குவது எப்படி? பேக்கிங் சோடா, எலுமிச்சை, வினிகர் உள்ளிட்ட வீட்டு பொருட்களை பயன்படுத்தும் எளிய குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிக்சி ஜாரின் பின்புறம் இப்படி கருப்பாக இருக்கா?
மிக்சி ஜாரை எவ்வளவு சுத்தமாக கழுவினாலும், அதன் பின்புறம் மட்டும் ஏன் இப்படி கருப்பாக இருக்கிறது? எண்ணெய் பிசுக்கு, மசாலா கறை, தூசி என கொஞ்சம் கொஞ்சமாக படிந்து, புதிதாக வாங்கிய மிக்சி ஜார் கூட பழையது போல காட்சியளிக்கிறதா? இனி இதற்காக கடினமாக தேய்த்து கைகளை வலிக்கச் செய்ய வேண்டாம்.
உங்கள் சமையலறையிலேயே இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து, இந்த பிடிவாதமான அழுக்கையும் கறையையும் சுலபமாக நீக்கலாம். அதுவும் அதிக செலவு இல்லாமல், அதிக நேரம் செலவிடாமல் சுத்தம் செய்ய முடியும்.
மிக்சி ஜாரின் பின்புறம் படிந்திருக்கும் கரையை எப்படி எளிதாக நீக்குவது? எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம்? என்பதை தெரிந்துகொண்டால், உங்கள் பழைய மிக்சி ஜாரையே புதிது போல பளபளப்பாக வைத்திருக்கலாம்.
மிக்சி ஜாரின் பின்புற அழுக்கு கரையை நீக்கும் எளிய வழிகள்
பேக்கிங் சோடா + எலுமிச்சை
ஒரு சிறிய கிண்ணத்தில் சுடுதண்ணீரை ஊற்றி, அதில் 1- 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து பேஸ்ட் போல தயாரிக்கவும். இந்தக் கலவையை மிக்சி ஜாரின் அடிப்பகுதியில் படிந்துள்ள கறை மற்றும் அழுக்கு மீது தடவி, 10-15 நிமிடங்கள் ஊறவிடவும்.
பின்னர் பழைய டூத் பிரஷ் அல்லது மென்மையான ஸ்க்ரப் கொண்டு மெதுவாகத் தேய்த்து, ஈரத்துணியால் நன்றாகத் துடைத்தால் கறைகள் நீங்கி அடிப்பகுதி சுத்தமாகும்.
வழிமுறை 2
பேக்கிங் சோடா + டிஷ்வாஷ் லிக்விட்
எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கிறதா? அப்படியென்றால், பேக்கிங் சோடாவுடன் சில துளிகள் டிஷ்வாஷ் லிக்விட் சேர்த்து பேஸ்ட் போலக் கலந்து கொள்ளுங்கள். இதை ஜாரின் எண்ணெய் பிசுக்கு படிந்துள்ள இடங்களில் நன்றாகத் தடவி, சில நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் மென்மையான ஸ்க்ரப் அல்லது பழைய டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால், பிசுபிசுப்பான எண்ணெய் அழுக்கு நீங்கி ஜார் புதுசு போல பளபளக்கும்.
வழிமுறை 3
வினிகர் + தண்ணீர்
நீண்ட நாட்களாகப் படிந்து, சாதாரணமாக துடைத்தும் போகாத கடினமான கறைகளா? அப்படியென்றால் வெள்ளை வினிகரும் தண்ணீரும் சம அளவில் கலந்து பயன்படுத்தலாம். இந்தக் கலவையில் ஒரு மென்மையான துணியை நனைத்து, கறை படிந்த பகுதியில் சில நிமிடங்கள் வைத்து ஊறவிடுங்கள். பின்னர் துணியால் நன்றாகத் துடைத்தால், படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்கி புதுசு போல ஜொளிக்கும்.
தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம்
ஜாரின் அடிப்பகுதியில் உள்ள சிறிய இடைவெளிகள், மூலைகளில் படிந்திருக்கும் அழுக்கை பெரிய ஸ்க்ரப்பர் மூலம் சுத்தம் செய்வது சற்று சிரமம். அதற்காகவே பழைய மென்மையான டூத் பிரஷ் கைகொடுக்கும்.
பேக்கிங் சோடா பேஸ்ட்டை கறை படிந்த பகுதிகளில் தடவி, டூத் பிரஷ் மூலம் மெதுவாகத் தேய்த்தால், எளிதில் சென்றடைய முடியாத மூலைகளில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கையும் சுத்தம் செய்ய உதவும்.
சுத்தம் செய்த பிறகு ஜாரை தண்ணீர் படிந்தபடியே வைக்காமல், முதலில் ஈரத்துணியால் நன்றாகத் துடைத்து, பின்னர் உலர்ந்த துணியால் முழுமையாகத் துடைக்க வேண்டும். குறிப்பாக ஜாரின் அடிப்பகுதி மற்றும் பிளேடு பொருத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
மேலும், ஜாரை ஒவ்வொரு முறையும் கழுவிய பிறகு அடிப்பகுதியை நன்றாகத் துடைத்து, முடிந்தால் வெயிலில் சிறிது நேரம் காயவைத்தால் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் கறை, அழுக்கு மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஒரு முக்கியமான விஷயம்
மிக்சி ஜாரின் அடிப்பகுதியில் மோட்டார்/ இணைப்பு பகுதி என்பதால், அந்த இடத்தில் தண்ணீரை நேரடியாக ஊற்றவோ அல்லது ஜாரை முழுவதுமாக தண்ணீரில் ஊறவைக்கவோ கூடாது. தண்ணீர் உள்ளே சென்றால் பேரிங் அல்லது இணைப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஜாரில் மிகவும் கடினமான கம்பி ஸ்க்ரப்பர் பயன்படுத்தினால் கீறல்கள் ஏற்படலாம். அதற்கு பதிலாக மென்மையான ஸ்க்ரப் அல்லது பழைய டூத் பிரஷ் பயன்படுத்துவது நல்லது.
கறை புதிதாக இருக்கும்போதே துடைத்துவிட்டால், பல நாட்கள் படிந்த அழுக்கை பின்னர் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

