- Home
- Lifestyle
- Brinjal Stem | கத்தரிக்காயை காம்புடன் சமைக்கலாமா? எப்படி சாப்பிட்டால் நல்லது?! முழுவிவரம்
Brinjal Stem | கத்தரிக்காயை காம்புடன் சமைக்கலாமா? எப்படி சாப்பிட்டால் நல்லது?! முழுவிவரம்
கத்தரிக்காயை காம்புடன் சமைப்பது நல்லதா? அதை எப்படி சமைத்தால் உடலுக்கு ஆரோக்கியம் என இந்தப் பதிவில் காணலாம்.

கத்தரிக்காய் காம்பு போட்டு சமைத்தால் என்னாகும் ?
இந்திய வீடுகளில் சமையலில் கத்தரிக்காய் சேர்க்காத வீடுகள் மிகவும் குறைவுதான். கருவாட்டு குழம்பு, புளிக் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய், சாம்பார் என அனைத்து வகையான குழம்பு வகைகளிலும், கூட்டு போன்ற தொடுகறிகளிலும் கத்தரிக்காய் இடம்பிடிக்கும். கருவாட்டு குழம்பில் போட்ட கத்தரிக்காயை சாப்பிடுவதற்கு பல வீடுகளில் போட்டியே இருக்கும். அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் அதை சமைக்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சில வீடுகளில் காம்புடன் தான் கத்தரிக்காய் சமைக்கிறார்கள். அப்படி சமைப்பது நல்லதா? கத்தரிக்காய் காம்பு (brinjal stem) போட்டு சமைத்தால் என்னாகும் என இந்தப் பதிவில் காணலாம்.
கத்தரிக்காய் நன்மைகள்
கத்திரிக்காய் வைட்டமின்கள் பி1, பி6,கே (B1, B6, K) ஆகியவை கொண்டுள்ளன. தசைகள், இதய ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், மாங்கனீஸ், ஃபோலேட், தாமிரம் ஆகிய தாதுக்களும் பொதிந்து காணப்படும் காய்கறியாகும். இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட நோயான சர்க்கரை நோயும் கட்டுக்குள் வர உதவும். புற்றுநோய் ஏற்படுவதை இது குறைக்கிறது. இதில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.
எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
கத்தரியை வாங்கும் போது பளபளப்பான தோல் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். வெளிர் நிறம் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்பட்டால் அது பழுத்த கத்தரிக்காய் அல்லது கெட்டுப்போன கத்தரிக்காய் என்று பொருள். அதை வாங்க வேண்டாம். நீளமான அல்லது உருளை வடிவத்தில் இருப்பதை வாங்க வேண்டும். வளைந்த அல்லது வித்தியாசமான கத்தரிக்காய் வாங்க வேண்டாம். கத்தரிக்காயை கையில் எடுக்கும் போது லேசாக இருக்கக் கூடாது. சற்று கனமாக இருக்க வேண்டும். அதை வாங்குங்கள். ஏற்கனவே கத்தரிக்காவில் ஓட்டைகள் இருந்தால் பூச்சிகள் இருக்கக்கூடும். அதை வாங்குவதை தவிர்க்க வேண்டும். கத்தரிக்காய் தொடும் போது கடினமாக இருக்கக்கூடாது. மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும் கத்தரிக்காயை தேர்வு செய்யுங்கள். வாடிய காம்பு, நிறம் மாறிய காம்பு, சுருங்கிய காம்பு போன்றவை தவிர்க்க வேண்டும். இளம் பச்சையாக ப்ரெஷாக இருக்கும் கத்தரிக்காய் தான் வாங்க வேண்டும்.
கத்தரிக்காவை காம்புடன் சமைக்கலாமா?
கத்தரிக்காவை காம்புடன் சமைக்க வேண்டாம். அதில் சில நன்மைகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், கூடவே தீமைகளும் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் காய்கறிகள், பயிர்கள் போன்றவற்றை அதிக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி தான் மகசூல் செய்கின்றனர். கத்தரிக்காவும் அதில் விதிவிலக்கு அல்ல. கத்தரிக்காய் காம்பில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லது ஏதேனும் நோய் தொற்றுகள், பூச்சிகள் இருக்கக்கூடும். அதை அப்படியே சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
கத்தரிக்காய் காம்பின் நன்மைகள்
கத்திரிக்காவில் காணப்படுவது போல அதன் காம்பில் சத்துக்கள் ஒன்றும் இல்லை. மிகக் குறைந்த அளவில் நார்ச்சத்துக்களும், சில தாதுக்களும் உள்ளன. கத்தரிக்காய் காம்பினை சாப்பிட்டால் அதிக சிறுநீர் வெளியேறும். ஆகவே சிறுநீரகங்களுக்கு நல்லது என சொல்லப்படுகிறது. ஆனால் நிறுவப்பட்ட சான்றுகள் இல்லை. இவை தவிர சொல்லிக் கொள்ளும்படியாக மிகப்பெரிய நன்மைகள் ஒன்றும் அதில் இல்லை.
ஆகவே சமைக்கும்போது கத்தரிக்காய் காம்பில் ஏதேனும் பூச்சிகள், நோய்த்தொற்று இருக்கிறதா? எனக் கவனித்து அதை நறுக்கி எறிந்து விட்டு கத்தரிக்காவை மட்டும் சமையலுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.