- Home
- Lifestyle
- Sleeping Tips: தினமும் தூக்கமில்லாம தவிக்கிறீங்களா? படுக்கையறையை இப்படி மாத்திப் பாருங்க!
Sleeping Tips: தினமும் தூக்கமில்லாம தவிக்கிறீங்களா? படுக்கையறையை இப்படி மாத்திப் பாருங்க!
Sleeping Tips: தினமும் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? உங்கள் படுக்கையறையில் சில மாற்றங்களை செய்தால் நிம்மதியாக தூங்கலாம். இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

நிம்மதியான தூக்கத்திற்கான எளிய வழிமுறைகள்
நன்றாக சாப்பிடுகிறோம், உடற்பயிற்சி செய்கிறோம், ஆனாலும் காலையில் எழும்போது சோர்வாகவே இருக்கிறது. பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்னை இது. இதற்கு முக்கியக் காரணம், நாம் போதுமான கவனம் செலுத்தாத நமது படுக்கையறை சூழல்தான். மனதிற்கு ஓய்வளிக்க வேண்டிய இடத்தில் தேவையற்ற பொருட்களும், கவனச்சிதறல்களும் நிறைந்திருந்தால், ஆழ்ந்த தூக்கம் என்பது சாத்தியமில்லை. சில எளிய மாற்றங்கள் மூலம், உங்கள் படுக்கையறையை அமைதியான ஓய்விடமாக மாற்றி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்.
1.தேவையற்ற பொருட்களுக்கு 'குட்பை' சொல்லுங்கள்
படுக்கையறையில் ஒழுங்கற்றுக் கிடக்கும் பொருட்கள்தான் மன அழுத்தத்தின் முதல் படி. நாற்காலியின் மீது குவிந்து கிடக்கும் துணிகள், அறையை நெரிசலாகக் காட்டும் அளவுக்கு அதிகமான அலங்காரப் பொருட்கள், உடைந்த மேஜை போன்ற பயன்படுத்தாத மரச்சாமான்கள் ஆகியவை மனதளவில் ஒருவித சோர்வை உருவாக்கும். ஆய்வுகளின்படி, ஒழுங்கற்ற சூழல் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். பயன்படுத்திய துணிகளை அதற்கான கூடையில் போடுவதும், சுத்தமானவற்றை மடித்து வைப்பதும் அறையை மட்டுமல்ல, உங்கள் மனதையும் இலகுவாக்கும்.
2. உடைந்த கண்ணாடி, பழைய மின்னணு சாதனங்கள்
அதேபோல், உடைந்த கண்ணாடி, பழைய மின்னணு சாதனங்கள் போன்ற பயன்படாத பொருட்களை அறையில் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். படுக்கையறை என்பது முடிந்தவரை மிகக் குறைவான பொருட்களுடன், சுத்தமாக இருக்க வேண்டும். இந்த மாற்றம், அறைக்குள் நுழையும்போதே ஒருவித நேர்மறை ஆற்றலையும், அமைதியையும் கொடுக்கும்.
3. மொபைல் போன் தேவையில்லை
இன்றைய காலகட்டத்தில் தூக்கத்தின் முதல் எதிரி, நம் கையில் இருக்கும் மொபைல் போன்கள்தான். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு வரை மொபைல் அல்லது லேப்டாப் பார்ப்பதால், அவற்றிலிருந்து வெளியாகும் நீல ஒளி (Blue Light) மூளையைத் தூண்டி, தூக்கத்தைத் தாமதப்படுத்துகிறது. எனவே, உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே கேட்ஜெட்களை அணைத்துவிடுவது அவசியம். சிக்கலாகக் கிடக்கும் சார்ஜர் வயர்களை ஒழுங்குபடுத்துவதும் அறைக்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கும். இதேபோல, படுக்கையறையை அலுவலகத்தின் நீட்சியாக மாற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
4. வேலை தொடர்பான கோப்புகள் வேண்டாம்
வேலை தொடர்பான கோப்புகள், லேப்டாப் போன்றவை கண்ணில் படும்போது, உறக்கத்திலும் வேலை குறித்த சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். பிரகாசமான வெள்ளை விளக்குகளுக்குப் பதிலாக, மென்மையான மஞ்சள் நிற (Warm) விளக்குகளைப் பயன்படுத்துவது, தூக்கத்தை வரவழைக்கும் மெலட்டோனின் ஹார்மோன் சுரக்க உதவும். இது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மைதான்.
5.சரியான மெத்தை தலையணை வேண்டும்
சரியான மெத்தையும், தலையணையும்கூட ஆழ்ந்த உறக்கத்திற்கு மிக முக்கியம். உங்கள் உடல்வாகுக்குப் பொருந்தாத மெத்தையால் முதுகுவலியும், தூக்கமின்மையும் ஏற்படலாம். அதேபோல, அறையின் வெப்பநிலை மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லாமல் சமநிலையில் இருக்க வேண்டும். லேசான ஜன்னல் காற்றோட்டம் இருப்பது நல்லது. வெளிப்புற இரைச்சல்கள் அதிகமாக இருந்தால், தடிமனான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
லாவெண்டர் அல்லது சந்தனம் போன்ற மென்மையான நறுமணங்களை அறையில் பயன்படுத்துவது மனதை அமைதிப்படுத்தி, தூக்கத்தை வரவழைக்க உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக, படுக்கையை உறக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் அமர்ந்து சாப்பிடுவது, வேலை செய்வது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தால், படுக்கைக்குச் சென்றவுடனேயே உங்கள் மூளை உறக்கத்திற்குத் தயாராகிவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

