Air Cooler: உங்க கூலரை AC மாதிரி மாத்தணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
வெயில் காலத்தில் ஏர் கூலர்தான் பலருக்கும் ஒரே ஆறுதல். ஆனால், சில சமயம் கூலர் போட்டாலும் எதிர்பார்த்த கூலிங் இருக்காது. உங்கள் கூலரே ஏசி மாதிரி ஜில்லுனு காற்று கொடுக்கும் டிப்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க கூலரை AC மாதிரி மாத்தணுமா?
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் பலரும் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏர் கண்டிஷனர்கள் (AC) மற்றும் ஏர் கூலர்களை (Air Cooler) நாடத் தொடங்கியுள்ளனர். ஏசி வாங்குவதற்கு அதிக முதலீடும், பராமரிப்புச் செலவும் தேவை என்பதால், நடுத்தரக் குடும்பங்களுக்கு ஏர் கூலர் தான் கைகொடுத்து வருகிறது.
ஆனால் வீட்டில் என்ன தான் ஏர் கூலர் வைத்தாலும் குளிர்ச்சியான காற்று வரவில்லை என பலர் புலம்புகின்றனர். ஆனால் நாம் செய்யும் சில சிறிய தவறுகள்தான் கூலரின் குளிர்ச்சியைக் குறைக்கின்றன. உங்கள் வீட்டில் உள்ள ஏர் கூலரையே ஏசி ரேஞ்சுக்குக் குளிர்ச்சியான காற்றைத் தர வைப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
ஜன்னலை திறந்து வையுங்கள்
பலரும் செய்யும் பெரிய தப்பு, ஏசி மாதிரி கூலர் போடும்போதும் எல்லா கதவு, ஜன்னலையும் மூடிவிடுவதுதான். இதனால் அறையில் ஈரப்பதம் (Humidity) அதிகமாகி புழுக்கம் கூடும். கூலர் நன்றாக கூலிங் தர, அதற்கு வெளியில் இருந்து ஃபிரெஷ் காத்து வர வேண்டும். அதனால், கூலரின் பின்பக்கத்தை ஜன்னல் அருகே வைத்துவிட்டு, அறையில் உள்ள காற்று வெளியே செல்ல இன்னொரு ஜன்னலை லேசாக திறந்து வையுங்கள். இதனால் காற்றோட்டம் நன்றாக இருந்து, கூலிங் அதிகமாகும்.
தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள்
கூலரின் குளிர்ச்சி, முழுக்க முழுக்க அதன் பக்கவாட்டில் உள்ள புல் அல்லது ஹனிகோம்ப் பேட்களை (Honeycomb Pads) பொறுத்துதான் இருக்கிறது. இவற்றில் தூசி படிந்தால், தண்ணீர் சரியாகப் பரவாது, அதனால் காற்றும் ஜில்லென்று வராது. வாரத்திற்கு ஒருமுறை இந்த பேட்களை தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள். சாதாரண புல் பேடாக இருந்தால், ஒவ்வொரு சீசனுக்கும் புது பேட்களை மாற்றுவது நல்லது. முடிந்தால், 'ஹனிகோம்ப் பேட்ஸ்' பயன்படுத்துங்கள், அவை அதிக நேரம் தண்ணீரைத் தேக்கி வைத்து, சூப்பரான கூலிங்கைத் தரும்.
தண்ணீர் ஓட்டம் சீராக இருக்க வேண்டும்
கூலரின் மேலே உள்ள தண்ணீர் பைப் துளைகளில் உப்பு படிந்து, தண்ணீர் பேட்கள் மீது சரியாக விழாது. பேட்கள் நனையவில்லை என்றால், காற்று சூடாகத்தான் வரும். கூலரை ஆன் செய்வதற்கு முன், பேட்கள் எல்லாப் பக்கமும் சமமாக நனைகிறதா என்று கவனியுங்கள். பைப் துளைகளை ஒரு பின் வைத்து சுத்தம் செய்து, தண்ணீர் ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
கூலர் டேங்கை சுத்தம் செய்வது அவசியம்
உடனடியாக ஏசி போன்ற காற்று வேண்டுமென்றால், கூலர் டேங்கில் சாதாரண தண்ணீருடன் சில ஐஸ் கட்டிகளையும் (Ice Cubes) போடுங்கள். ஐஸ் போடுவதால் தண்ணீர் மிகவும் சில்லென்று மாறும். இந்த ஜில்லான தண்ணீர் பேட்கள் வழியாகப் பாயும்போது, ஃபேனிலிருந்து வரும் காற்று செம கூலிங்காக இருக்கும். இப்போது வரும் பல கூலர்களில் ஐஸ் ட்ரே தனியாகவே உள்ளது, அதைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.
கூலர் டேங்கில் தண்ணீர் பல நாட்கள் தேங்கி இருந்தால், பாசி பிடித்து துர்நாற்றம் வீசும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுங்கள். டேங்கை சுத்தம் செய்யும்போது, சிறிது வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால், பாக்டீரியாக்கள் அழிந்து டேங்க் ஃபிரெஷ்ஷாக இருக்கும். அதேபோல, மோட்டாருக்கு அவ்வப்போது ஆயில் விட்டால், அது நீண்ட காலம் உழைத்து, நல்ல செயல்திறனை வெளிப்படுத்தும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

