Lizard: வீட்டு பால்கனி பல்லிகளின் புகலிடமா? விரட்டியடிக்க ஈஸியான வழிகள் இதோ!
How to Get Rid of Lizard: அடுக்குமாடி குடியிருப்புகளில் பால்கனியில் பல்லிகள் அட்டூழியம் தாங்க முடியவில்லையா? பின்வரும் விஷயங்களை செய்தால் இனிமேல் அங்கு பல்லிகளுக்கு வேலை இருக்காது. பல்லிகளை விரட்டுவது எப்ப்டி? என விரிவாக பார்ப்போம்.

பல்லிகளை விரட்டியடிக்க ஈஸியான வழிகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பால்கனியில் பல்லிகள் வராமல் தடுக்க என்ன செய்வது என்பது அன்றாடக் கவலையாகவே மாறிவிட்டது. மனிதர்களைத் தேடி இந்த பல்லிகள் வருவதில்லை. அவற்றின் முக்கிய இலக்கு அங்கு மொய்க்கும் சிறு பூச்சிகள்தான். உணவு, தட்பவெப்பம், பாதுகாப்பான மறைவிடம் ஆகிய மூன்று விஷயங்களே பல்லிகளை உங்கள் வீட்டை நோக்கி ஈர்க்கின்றன.
பல்லிகள் ஏன் வருகின்றன?
இரவு நேரங்களில் பால்கனியில் தொடர்ந்து விளக்குகளை எரியவிடுவது கொசு, ஈ, அந்துப்பூச்சி போன்றவற்றை அதிக அளவில் ஈர்க்கும். வெளிச்சத்தைத் தேடி வரும் இந்த இரைகளைச் சாப்பிடவே பல்லிகள் அங்கு முகாமிடுகின்றன. பயன்பாடு இல்லாத நேரங்களில் விளக்குகளை அணைத்து வைப்பதும், பல்புக்கு அருகே இறந்து கிடக்கும் பூச்சிகளை அப்புறப்படுத்துவதும் முதல் கட்டத் தீர்வாகும்.
அதேபோல, பால்கனியில் அமர்ந்து சாப்பிடும்போது சிதறும் உணவுத் துகள்கள், பழத்தோல்கள், இனிப்புப் பானங்கள் எறும்புகளையும் ஈக்களையும் வரவழைக்கும். இந்தச் சிறு பூச்சிகளை வேட்டையாட பல்லிகள் தானாகவே அங்கு வந்துவிடும். சாப்பிட்ட உடனே தரையைச் சுத்தம் செய்வதுடன், அங்குள்ள குப்பைத் தொட்டிகளை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். சுவர் மூலைகள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் பூந்தொட்டிகளுக்குப் பின்னால் சேரும் சிலந்தி வலைகளும் பல்லிகளுக்குச் சிறந்த உணவு விடுதிகள்தான். வாரத்துக்கு ஒருமுறையாவது இந்தப் பகுதிகளை முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
மறைவிடங்களை அகற்றும் வழிகள்
பழைய அட்டைப் பெட்டிகள், உடைந்த பொருட்கள், செய்தித்தாள்கள், பயன்படுத்தாத காலணிகள் என பால்கனியை ஒரு குடோன் போல மாற்றுவது பல்லிகளுக்கு வசதியான தங்குமிடத்தை உருவாக்கி கொடுக்கும். தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்றிவிட்டு, அத்தியாவசியப் பொருட்களை மட்டும் சுவரோடு ஒட்டாமல் இடைவெளி விட்டு அடுக்கலாம்.
பால்கனியில் வளர்க்கும் செடிகள் அடர்த்தியாக இருந்தால், உதிர்ந்த இலைகளுக்கு அடியில் பூச்சிகள் எளிதாகத் தங்கிவிடும். காய்ந்த இலைகளை அகற்றுவது, கிளைகளை வெட்டிவிடுவது, தொட்டிக்கு அடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது போன்ற பராமரிப்புப் பணிகள் மிக அவசியம்.
ஏசி குழாய்கள், மின் வயர்கள் செல்லும் பாதைகள் மற்றும் கதவு இடுக்குகளில் உள்ள சிறிய இடைவெளிகள் வழியே இவை எளிதாக வீட்டுக்குள் நுழைந்துவிடும். காற்றோட்டத்துக்கான துளைகளைத் தவிர்த்துவிட்டு, மற்ற விரிசல்களைப் பொருத்தமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு அடைத்துவிடுவது பாதுகாப்பானது.
தடுப்பு வலைகளும் கட்டுக்கதைகளும்
முட்டை ஓடு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை வைத்தால் பல்லிகள் ஓடிவிடும் என இணையத்தில் பல தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், அறிவியல் ரீதியாக இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், இவற்றை மட்டுமே நம்பியிருப்பது பலன் தராது. இதற்குப் பதிலாக, பால்கனி கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தரமான கொசு வலைகளைப் பொருத்துவது சிறந்த பலனைத் தரும். புறா வலைகள் கட்டியிருந்தாலும், அதன் கீழ்ப்பகுதியில் இடைவெளி இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பல்லிகளை நேரடியாகக் கையால் பிடிப்பதையோ, ஆபத்தான ரசாயனங்களை அடிப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

