- Home
- Lifestyle
- Lifestyle: உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை.. எத்தனை நாளைக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? மருத்துவர் அறிவுரை
Lifestyle: உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை.. எத்தனை நாளைக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? மருத்துவர் அறிவுரை
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உள்ளாடைகள் துவங்கி படுக்கை விரிப்புகள் வரை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுகாதாரம் மிகவும் முக்கியம்
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு சுகாதாரமும் முக்கியம். சுகாதாரம் என்பது நம் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும். வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் மனன் வோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக விளக்கி இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ளாடைகள் துவங்கி போர்வைகள் வரை எந்தப் பொருட்களை, எந்த கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் என்று விளக்கி இருக்கிறார். அவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்ளாடைகள்
இந்த அத்தியாவசியமான பொருட்களை சுத்தம் செய்யாவிட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும், இது கடுமையான தொற்றுக்களை ஏற்படுத்தும், ஒருவேளை நீங்கள் இந்த பொருட்களை சுத்தம் செய்யாவிட்டால் அதை இப்போது இருந்து தொடங்குங்கள் என்று அவர் கூறியிருக்கிறார். நாம் தினமும் பயன்படுத்தும் பெட்ஷீட், தலையணை, தலையணை உறை, போர்வைகள், டூத் பிரஷ், ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகள் ஆகிய பொருட்கள் இதில் அடங்கும். உள்ளாடைகளை பொறுத்தவரை நாம் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அவற்றை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உள்ளாடைகள் நோய் தொற்றுக்களை அதிகரிக்கும் என்பதாலும், அந்தரங்க உறுப்புகளை பாதுகாக்கும் என்பதாலும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னரும் துவைக்க வேண்டியது அவசியம்.
தலையணை உறைகள் மற்றும் டூத் பிரஷ்
பல் துலக்கும் கருவியானது நம் வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் வாயில் தங்கி வாயில் தொற்று, ஈறு நோய் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் பல் துலக்கும் கருவியை நன்கு சுத்தம் செய்யவும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பல் துலக்கும் பிரஷ் அல்லது கருவிகளை மாற்ற வேண்டும். உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். ஈரமான சூழல் பாக்டீரியாக்களை வளரச் செய்யலாம். அடுத்தபடியாக தலையணை உறைகளை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும். அடிக்கடி முகப்பருக்கள் ஏற்பட்டாலோ அல்லது எண்ணெய் மிகுந்த சருமம் இருந்தாலோ தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியம்.
தலையணை மற்றும் பெட்ஷீட்
அதேபோல் தலையணைகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். தலையணை நம்முடைய வியர்வை மற்றும் உமிழ்நீரால் நனைந்திருக்கும். இதன் காரணமாக அதில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். இந்த தலையணைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பொழுது முகத்தில் தொற்றுகள், தலையில் தொற்றுகள், முடி உதிர்வு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தலையணையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி விடுவது நல்லது. அதேபோல் நாம் பயன்படுத்தும் பெட் ஷீட்டை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும். சிலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து விட்டால் அதை பல வாரங்களுக்கு துவைக்காமல் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது தவறான முறையாகும். ஜீன்ஸ் பேண்ட்களை நான்கு முதல் ஐந்து முறை அணிந்த பிறகு கட்டாயமாக துவைக்க வேண்டும்.
முகம் துடைக்கும் துண்டு
அதேபோல் நாம் உடல் மற்றும் முகம் துடைக்க பயன்படுத்தப்படும் துண்டு கிருமிகளை காந்தம் போல ஈர்த்து தன்னகத்தை வைத்துக் கொள்ளும். எனவே துண்டை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை துவத்து வெயிலில் உலர்த்தி, அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பயன்படுத்தும் துண்டை மாற்றிக் கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் நாம் தினமும் பயன்படுத்தும் செல்போன்கள் அழுக்குகள் மற்றும் பூஞ்சைகளை எளிதில் சேகரிக்கின்றன. இவை கைகளில் பரவி சருமத் தொற்று அல்லது முகப்பரு பிரச்சனைகளை உருவாக்கலாம். எனவே தினமும் ஒரு முறை ஆல்கஹால் அடங்கிய கிருமி நாசினி துடைப்பான்கள் அல்லது மைக்ரோ ஃபைபர் துணியால் போனை சுத்தம் செய்ய வேண்டும். குளியலறை கழிவறை போன்ற இடங்களுக்கு போனை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பிற பொருட்கள்
இது மட்டுமல்லாமல் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகள் ஈரமாக இருப்பதால் இவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் உறைவிடமாக மாறிவிடுகின்றன. இவற்றை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் உணவு மூலம் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ஸ்பாஞ்சை சுடுநீரில் துவைத்து அதை வெயிலில் உலர்த்தலாம். இதன் மூலம் கிருமிகள் அழியும். ஒவ்வொரு மாதமும் ஸ்பாஞ்சை மாற்ற வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள், குவளைகளை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதிலும் பாக்டீரியாக்கள் உருவாகலாம். இது வயிற்று தொற்றுகளை ஏற்படுத்தலாம். ஸ்டீல் பாட்டிலாக இருந்தால் சுடுநீரில் சோப்புக்கொண்டு கழுவலாம். பிளாஸ்டிக் பாட்டில்களாக இருந்தால் உள்ளே பிரஷ் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.
மருத்துவர் அறிவுரை
மருத்துவர்களின் கூற்றுப்படி அசுத்தமான பொருட்களால் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் நம் உடலுக்குள் செல்லும். இதன் காரணமாக தோல் நோய்கள், ஒவ்வாமை, வயிற்றுப் பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி சுவாசப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சரியாக பராமரிக்க வேண்டும்.்மேற்கூறிய எளிய பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.