Apple Juice : ஆப்பிளை ஜூஸ் போட்டு குடிப்பீங்களா? இந்த விஷயம் தெரியுமா?
ஆப்பிள் ஜூஸ் குடிப்பதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Apple Juice Health Benefits and Risks
ஆப்பிள் பழம் உடல் நலத்திற்கு மிகுந்த நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். ஏனெனில் இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால், பல நோய்களிலிருந்து விலகி இருக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள். இப்போது கேள்வி என்னவென்றால் ஆப்பிள் பழத்தை ஜூஸாக குடித்தால் ஆரோக்கியத்திற்கு என்ன ஆகும்?
ஏனெனில் இனிப்பு மற்றும் மென்மையான சுவை காரணமாகவும், ஆரோக்கியமான பானம் என்பதாலும் பலரும் இதை குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் அப்படி ஆப்பிள் ஜூஸ் குடிப்பது ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு இணையாகுமா? எனவே, ஆப்பிள் ஜூஸ் இனிப்பான மற்றும் ஆரோக்கியமான பானமாக கருதப்பட்டாலும், அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வது ரொம்பவே முக்கியம். அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள் ஜூஸ் நன்மைகள் :
- ஆப்பிள் ஜூஸ் ஒரு சிறந்த நீரேற்ற பானமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆப்பிளில் 88 சதவீதம் தண்ணீர் உள்ளன. மேலும் ஆப்பிள் பழத்தில் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளதால் அவை தசை செயல்பாடு இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். எனவே, குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- ஆப்பிள் ஜூஸில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் வீக்கம் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். அதிலும் குறிப்பாக வடிகட்டாத ஆப்பிள் ஜூஸில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளததாம்.
- சில ஆய்வுகள் படி, ஆப்பிள் ஜூஸ் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுவதாக சொல்லுகின்றன.
- ஆப்பிள் ஜூஸ் சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது.
- ஆப்பிள் ஜூஸ் அல்சைமர் நோய்க்கு எதிராக செயல்படும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆப்பிள் ஜூஸ் தீமைகள் :
- ஆப்பிள் ஜூஸ் உடலை நீரேற்றமாக வைத்தாலும், உடலுக்கு ஆக்சிஜனேற்றிகளை வழங்கினாலும் இதில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளதால் இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கவனம் தேவை.
- ஒரு முழு ஆப்பிள் பழத்தில் 4 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. அதுவே ஆப்பிள் ஜூஸில் 0.5 கிராமுக்கும் குறைவாக தான் நார்ச்சத்து உள்ளன. இதனால் ஆப்பிள் ஜூஸ் திருப்தி உணர்வை தராமல் அதிகமாக குடிக்க தூண்டும்.
- ஆப்பிள் ஜூஸ் இருக்கும் அமிலத்தன்மை மற்றும் இனிப்பு காரணமாக அவை பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதுவும் குறிப்பாக குழந்தைகள் இதை குடிப்பதன் மூலம் பற்களில் சொத்தை ஏற்படும்.
- கடைகளில் விற்பனையாகும் பேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஜூஸ்களில் ஈயம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே நம்பகமான பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்யுங்கள்.
நினைவில் கொள்:
1. ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் இதை நீங்கள் ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக பழமாக சாப்பிடுவது தான் நல்லது.
2. ஒருவேளை ஆப்பிள் ஜூஸ் குடிக்க விரும்பினால் அதை ரசித்து ருசித்து குடிப்பதற்கு பதிலாக ஒரே மடக்காக குடித்தால் பற்கள் சேதாரமாகாது.
3. முக்கியமாக பேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடிப்பது தான் சிறந்தது.