குழந்தைகளுக்கு மொட்டை போட்டால் முடி அடர்த்தியா வளருமா? பின்னணி என்ன?
குழந்தைகளுக்கு மொட்டை அடித்த பிறகு முடி அடர்த்தியாக வளரும் என்பது உண்மையா? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்து ஒரு வருடம் கழித்து மொட்டை போடுவார்கள். மதம், இனம் என பார்த்தால் ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு கொள்கைகளை கொண்டுள்ளனர். அதன்படி, சில பிரிவினர் குழந்தைகளுக்கு 3 மொட்டை வரை கூட போடுகின்றனர். குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் பாரம்பரியம் தமிழர்களிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. இப்படி குழந்தைகளுக்கு மொட்டை போட்டால் முடியின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும் என்பது பரவலாக சொல்லப்படும் கருத்தாகும். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. உண்மையில் மொட்டை அடித்த பின்னர் முடியின் அடர்த்தியில், வளர்ச்சி வீதத்தில் மாற்றம் ஏற்படுமா? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
குழந்தைகளுக்கு மொட்டை போடுவதால் அவர்களுடைய முடியும் அடர்த்தியும், தன்மையும் எவ்விதத்திலும் மாறுபடுவதில்லை. ஆரம்பத்தில் காண்பதற்கு அப்படி தோன்றினாலும் அதில் உண்மை இல்லை என்பதே அறிவியல் கூற்றாகும்.
மொட்டை அடித்தால் என்னாகும்?
தலைமுடியின் வேர்க்கால்களே முடியின் அளவை தீர்மானிக்கும். முடி மெல்லியதாக தெரிவதும், தடிமனாக இருப்பதும், அடர்த்தியாக இருப்பது வேர்க்கால்களால்தான். இவை தலையில் உள்ள சருமத்திற்கு கீழே இருக்கின்றது. மொட்டை அடிப்பதால் முடியின் வெளிப்புற தண்டு அமைப்பில் தான் மாற்றம் வருமே தவிர அதன் வேர்க்கால்களில் அல்ல. அதனால் முடியின் அடர்த்தி மாறாது. மொட்டை அடித்ததும் ஆரம்ப கால வளர்ச்சியில் முடி அடர்த்தியாக தெரியும். இது தற்காலிக மாற்றம். அது பின்னாட்களில் பழைய நிலைக்கு மாறிவிடும்.
முடி வளர்ச்சிக்கு எது காரணம்?
தலைமுடி வளர்ச்சியில் மரபணு, ஹார்மோன் இரண்டும் பங்கு வகிக்கின்றன. தலைமுடி அடர்த்தியாக, வேகமாக வளர ஹார்மோன் சமநிலை அவசியம். மரபணுபடி உங்களுக்கு வழுக்கை தலை என்றால் அந்த இடத்தில் மொட்டை அடித்தாலும் மீண்டும் வழுக்கைதான் இருக்கும்.
ஆய்வின் உண்மை!
மொட்டை அடிப்பதால் முடியின் நிறம், அடர்த்தி, வளர்ச்சியில் எந்த வித மாற்றமும் வராது என்பதை ஜர்னல் ஆப் இன்வெஸ்டிகேட்டிவ் டர்மடாலஜி (Journal of investigative dermatology) நடத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. ஒருவர் முடி வளர வேண்டும் என்று மொட்டை அடிப்பது எந்த பலனையும் தராது. குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் முடி நன்கு வளர்கிறது என்பது கட்டுக்கதை அதில் எந்த உரிமையும் இல்லை.