- Home
- Lifestyle
- Cognitive Debt : செயற்கை நுண்ணறிவால் மனித மூளைக்கு காத்திருக்கும் பேராபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை
Cognitive Debt : செயற்கை நுண்ணறிவால் மனித மூளைக்கு காத்திருக்கும் பேராபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மனிதர்களுக்கு பல நன்மைகளை தந்தாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்மறை பின் விளைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

AI vs Human Brain
தற்போதைய காலத்தில் பிரபலமான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்கி வருகிறது. ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி தொடங்கி, உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை இந்தத் தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஐடி என்கிற நிறுவனம் AI தொழில்நுட்பம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இந்த தொழில்நுட்பம் வந்த பிறகு மனிதர்களுக்கு காக்னிட்டிவ் டெப்ட் (Cognitive Debt) போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
AI ஆல் மனிதர்களுக்கு காக்னிட்டிவ் டெப்ட் பிரச்சனை
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு காக்னிட்டிவ் டெப்ட் பிரச்சனை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஒரு தகவல் அல்லது விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது குறித்து சிந்தித்தோ, ஆராய்ந்தோ தெரிந்து கொள்ளாமல் அதற்கான பதில் கிடைத்தால் மட்டும் போதும் என்கிற மனப்பான்மையுடன் தேடத் துவங்குவது தான் காக்னிட்டிவ் டெப்ட். அந்த விடை ஏன் வந்தது? எப்படி வந்தது? அந்த கேள்விக்கான விடை சரியானதுதானா என்பதை எதையும் குறித்த யோசிக்காத நிலையை தான் காக்னிட்டிவ் டெப்ட் என்கிறோம். எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் மூளைக்கு வேலை கொடுத்து சிந்திக்காமல் AI தொழில்நுட்பத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருப்பது தான் காக்னிட்டிவ் டெப்ட்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் மனிதர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். சுயமாக யோசித்து எழுதுபவர்கள் ஒரு குழுவிலும், AI உதவியை நாடிய எழுதுபவர்கள் இரண்டாவது குழுவிலும், சுயமாக யோசித்து தேவைக்கு மட்டும் கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளை பயன்படுத்துபவர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிக்கப்பட்டனர். இதில் AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி கட்டுரை எழுதியவர்களுக்கு காக்னிட்டிவ் டெப்ட் பிரச்சனை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மூளையின் செயல்பாடுகளை இ.ஈ.ஜி என்ற கருவி மூலம் சோதித்துப் பார்த்ததில் அவர்களுக்கு இந்த இத்தகைய பிரச்சனை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
AI பயன்படுத்தினால் மூளையில் ஏற்படும் சிக்கல்
நம்முடைய புத்தி கூர்மை நமது மூளையில் உள்ள நியூரான்களின் அமைப்பை பொறுத்து அமைகிறது. நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது நம்முடைய நியூரான்களுக்கு இடையேயான கனெக்சன் மற்றும் புரதங்கள் உருவாவது அதிகரிக்கும். இதன் காரணமாக நம்முடைய நினைவாற்றல், கற்பனை திறன், ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதில் முடிவெடுக்கும் திறன் போன்றவை அதிகரிக்கும். அதே சமயம் நாம் சிந்திக்காமல் முழுவதுமாக AI உதவியை நாடி இருக்கும் பொழுது நியூரான்களுக்கு இடையேயான கனெக்சன் மற்றும் புரதங்கள் உருவாவது அதிகரிக்காது. இதனால் நினைவாற்றல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். செயற்கை நுண்ணறிவை மட்டுமே சார்ந்து கட்டுரை எழுதியவர்களுக்கு அது குறித்து கேட்கும் பொழுது அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதையே அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.
AI பயன்படுத்தாதவர்களுக்கு நினைவாற்றல் அதிகம் ஏன்?
அதே நேரத்தில் சுயமாக சிந்தித்து கட்டுரை எழுதியவர்களுக்கு தான் என்ன எழுதினோம் என்பதையும், அது குறித்த கேள்விகளுக்கும் 100% அவர்களால் பதில் அளிக்க முடிந்ததையும், அவர்களுடைய நினைவாற்றல் நன்றாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. நமது மூளையில் உள்ள பேப்பர் சர்க்யூட்மெண்ட் நாம் ஒன்றை படித்து பார்க்கும் பொழுது அதனை பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதை சிந்திக்கும் பொழுது இரண்டு மூன்று சுழற்சிகளுக்கு பின்னர் நம் நினைவிற்கு அவற்றை அனுப்பும். ஆனால் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எழுதும் பொழுது நாம் மூளைக்கு வேலை கொடுக்காததால் இது மூளையில் பதிவதற்கோ அல்லது நினைவாற்றலுக்கு செல்வதற்கான வாய்ப்புகளோ மிகவும் குறைவு.
AI உதவியுடன் வீட்டுப்பாடம் செய்யாதீர்கள்
இந்த காலத்தில் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சிறுவயதிலேயே AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீட்டுப் பாடங்களை செய்வதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. வீட்டுப்பாடம் என்பது பள்ளியில் நாம் படித்ததை மறுபடியும் யோசித்து, அது குறித்து சிந்தனை செய்து, ரீ கால் செய்வதற்காகத் தான். ஆனால் AI உதவியுடன் வீட்டுப் பாடங்களை செய்யும்பொழுது அது குறித்து யோசிப்பதற்கான வாய்ப்புகளே ஏற்படாமல் போகிறது. இதனால் மாணவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கூடுமானவரை பெற்றோர்கள் AI உதவியை நாடி குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்யும் வேலைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எதற்கெடுத்தாலும் AI பயன்படுத்தாதீர்கள்
எந்த தொழில் நுட்பமானாலும் அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே அது நன்மையா? தீமையா? என்று முடிவு செய்யப்படும். AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான். அதிலிருந்து பல்வேறு தகவல்களை நம்மால் பெற முடியும். ஆனால் யோசிப்பதற்கே நேரம் கொடுக்காமல் அனைத்து தகவல்களையும் AI-ஐ மட்டுமே சார்ந்து இருப்பது தவறான செயலாகும். ஒரு தகவல்களை பெறுவதற்கு முன்பு அது குறித்து யோசிக்க வேண்டும். சுயமாக சிந்தித்து விடை தேட முயற்சிக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு அடிப்படை கட்டமைப்பை செய்த பின்னரே AI உதவியை நாட வேண்டும். இப்படி செய்தால் நம்முடைய சுய சிந்தனை வளர்வதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறந்த தகவல்களை நம்மால் பெற முடியும். எனவே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் முன் உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்.