Cough Syrup: மெடிக்கல் ஷாப்பில் இனி இருமல் மருந்து தரமாட்டாங்க! ஏன் தெரியுமா?
Cough Syrup: இனிமேல் நீங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் இருமல் மருந்து வாங்க முடியாது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (prescription) இல்லாமல் இருமல் சிரப் விற்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருமல் சிரப் விற்பனைக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
பலரும் சளி, இருமல் என்றாலே, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, மருத்துவரிடம் செல்லாமல் நேரடியாக மருந்து கடைகளில் மருந்து வாங்குவது வழக்கம். இதனால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால் இனி மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல் மருந்து வாங்க முடியாது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து கிடையாது
மத்திய சுகாதாரத் துறை, நாட்டின் உயரிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான 'Drugs Technical Advisory Board' (DTAB) உடன் ஆலோசித்த பிறகே 1945 மருந்து விதிகளைத் திருத்தியுள்ளது. இதுவரை 'ஷெட்யூல் K' பட்டியலில் இருந்த இந்த சிரப்களை, இனி மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்க முடியாது.
20 குழந்தைகள் உயிரிழந்த சோகம்
கடந்த ஆண்டு ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சோகமே இந்த முடிவுக்குக் காரணம். அங்கு 'கோல்ட்ரிஃப்' (Coldrif) என்ற தரமற்ற இருமல் மருந்தை குடித்ததால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் காம்பியா (Gambia), உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலும் தரமற்ற இந்திய இருமல் சிரப்களைக் குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. உலக சுகாதார அமைப்பும் (WHO) இதுகுறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. இதன் பின்னணியில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மூலப்பொருட்களை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உலகளாவிய அழுத்தம் அதிகரித்தது.
சிறுநீரக பாதிப்பு ஏற்படும்
'டைஎத்திலீன் கிளைக்கால்' கலந்த நச்சு சிரப்களைக் குடிக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்பத்தில் வாந்தி, வயிற்று வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவே பின்னர் 'தீவிர சிறுநீரக செயலிழப்பு' (Acute Kidney Injury - AKI) ஆக மாறி உயிருக்கே ஆபத்தாய் முடிகிறது.
மத்திய அரசின் புதிய கொள்கை
அந்த சிரப்பை ஆய்வு செய்தபோது, அதில் 48.6% 'டைஎத்திலீன் கிளைக்கால்' (Diethylene Glycol) இருந்தது தெரியவந்தது. இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கொடிய விஷ ரசாயனம். இது சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்துவிடும்.
சுய மருத்துவத்தின் பேராபத்து
இருமல் என்பது ஒரு நோயல்ல; அது உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பாதிப்பின் அறிகுறி மட்டுமே. அது சாதாரண சளியாகவும் இருக்கலாம் அல்லது நிமோனியா, ஆஸ்துமா போன்ற தீவிர பாதிப்பாகவும் இருக்கலாம். மருத்துவர் ஆலோசனையின்றி நாமாகவே சிரப் வாங்கித் தரும்போது, உண்மையான நோய் கண்டறியப்படாமல் மறைக்கப்பட்டு, நிலைமை இன்னும் மோசமாகிறது.

