ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் EVM மெஷின் ஏன் பயன்படுத்துவதில்லை தெரியுமா?
தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றாக வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பயன்படுத்துவதில்லை.

தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. அதில் முதன்மையானது, காகிதங்கள் அச்சிடுவதற்கான செலவு; இரண்டாவது, வாக்கு எண்ணிக்கை வரை வாக்குச்சீட்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருத்தல். இந்த சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றாக வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இந்தியாவில் பரவலான பயன்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. எனினும், ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அவை குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில்களில் பயன்படுத்துவதில்லை. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் வாக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் முற்றிலும் மாறுபட்டவை. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் இந்த தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி நடத்தப்படுகின்றன.
இவற்றில், ரகசிய வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்களிக்கும் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தை குறிக்கும் வகையில் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு அருகில் எண்களை எழுத வேண்டும். எண்களை 1, 2 என்ற விருப்பத்தின் வரிசையில் இருக்க வேண்டும். வாக்காளர்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அவர்கள் விரும்பும் அளவுக்கு விருப்ப எண்களை வாக்குச்சீட்டில் எழுதலாம்.
வாக்கு செல்லுபடியாகும் வகையில் விருப்ப எண்ணை வைக்க வேண்டும். மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம். இதற்காக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாக்களை வழங்கும். வாக்காளர்கள் அந்த பேனாவால் மட்டுமே தங்கள் வாக்குகளை குறிக்க வேண்டும். வேறு எந்த பேனா பயன்படுத்தினால் அந்த வாக்கு செல்லாதவையாகும். விருப்ப எண்ணின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த வேறுபட்ட தொழில்நுட்பம் இல்லை. அதனால்தான் அவை குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பயன்படுத்தப்படுவதில்லை.
இந்நிலையில் நாட்டின் 17-வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் NDA சார்பில் கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.