பாகிஸ்தானுக்கு நெத்தியடி பதில்... ஐ.நா. சபையை அதிர வைத்த இந்திய அதிகாரி பெடல் கெலாட்!
ஐ.நா. பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் குற்றச்சாட்டுகளுக்கு, இந்தியாவின் முதல் செயலாளர் பெடல் கெலாட் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார். பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வில் இந்தியாவின் குரல்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்வைத்த கருத்துகளுக்கு, இந்திய நிரந்தரப் பணிக்குழுவின் முதல் செயலாளரான (First Secretary) பெடல் கெலாட் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் பதிலுரிமையைப் (Right of Reply) பயன்படுத்திப் பேசிய , ஷெபாஸ் ஷெரீப் 'மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தியுள்ளார்' என்று குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் பிரதமருக்கு மறுப்பு
பாகிஸ்தான் பிரதமர் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறித்தும் பேசியதை பெடல் கெஹ்லோட் தகர்த்தெறிந்தார். "அழிக்கப்பட்ட ஓடுபாதைகளும், எரிந்துபோன விமானக் கொட்டகைகளும் (hangars) வெற்றி போலத் தெரிந்தால், பிரதமர் அதை அனுபவிக்கலாம்" என்று சாடிய அவர், 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் சண்டையை நிறுத்தும்படி இந்தியாவிடம் 'வேண்டியது' என்றும் சுட்டிக்காட்டினார்.
பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்
பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், தோல்வியை வெற்றியாகச் சித்தரிக்க முயல்வதிலும் பாகிஸ்தான் பொய்யைப் பரப்புவதாக கெலாட் குற்றம் சாட்டினார். உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கூட்டாளியாக இருப்பதாகக் கூறிக்கொண்டே, ஒசாமா பின்லேடனுக்குப் பத்து ஆண்டுகளாக பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை அவர் நினைவுபடுத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் 26 பொதுமக்களைப் பலிகொண்ட பகல்காம் தாக்குதலுக்குக் காரணமான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)' என்ற குழுவை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தான் பாதுகாத்ததையும் அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த பெடல் கெலாட், பாகிஸ்தான் முதலில் பயங்கரவாத முகாம்களை அகற்றிவிட்டு, இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாகிஸ்தானுடன் உள்ள அனைத்து நிலுவைப் பிரச்சனைகளும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்றும், இதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை என்றும் இந்தியா தனது நிலையைக் கண்டிப்பாகத் தெளிவுபடுத்தினார்.
யார் இந்த பெடல் கெலாட்?
அரசியல் அறிவியல், மொழிபெயர்ப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அனுபவமிக்க அதிகாரி பெடல் கெலாட்.
இவர் ஜூலை 2023-இல் ஐ.நா.வில் இந்தியாவின் நிரந்தரப் பணிக்குழுவில் முதல் செயலாளராகப் பொறுப்பேற்றார். செப்டம்பர் 2024-இல், அவர் ஐ.நா.வில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர், 2020 ஜூன் முதல் 2023 ஜூலை வரை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஐரோப்பிய மேற்குப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.
இசைக் கலைஞர்
மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவில் உள்ள மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் மொழி விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பில் மற்றொரு முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
பணிகளைத் தாண்டி, கெலாட் ஒரு சிறந்த இசைக்கலைஞர். 'பெல்லா சியாவ்', 'லாஸ்ட் ஆன் யூ' மற்றும் 'யே ஜவானி ஹை தீவானி' திரைப்படத்தின் 'கபீர' போன்ற பாடல்களை அவர் கிட்டார் வாசித்துப் பாடும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.