டீல் பேச இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்! டிரம்பை சீண்டிப் பார்க்கும் மோடி!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்தியா ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவுக்கு வருகிறார் ரஷ்ய அதிபர் டிரம்ப்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, உக்ரைன் போரினால் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது.
தோவல் மாஸ்கோவில் அளித்த பேட்டியில், "நமக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு நீண்டகாலமாக சிறப்பு வாய்ந்தது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். உயர் மட்டத் தலைவர்களின் சந்திப்புகள் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. அதிபர் புதினின் இந்தியா வருகை குறித்து அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சந்திப்புக்கான தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார். இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் இந்த சந்திப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - இந்தியா வர்த்தகப் பதற்றம்
ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் இந்த நடவடிக்கை, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால், ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரி விதிப்போம் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை, போரின் நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் வந்துள்ளது.
இந்தியா - ரஷ்யா வர்த்தகம்
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சோவியத் காலத்திலிருந்தே வலுவாக உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தியா ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. 2023 மே மாத நிலவரப்படி, இந்தியா ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெய் அல்லது அதன் மொத்த இறக்குமதியில் சுமார் 45% ரஷ்யாவிலிருந்து வாங்கியுள்ளது.
டிரம்ப் - புடின் சந்திப்பு
இதற்கிடையே, அதிபர் புடின் விரைவில் டிரம்ப்பையும் சந்திக்கவுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபரின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ், இரு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சந்திப்புக்கான இடம் ஒப்புக்கொள்ளப்பட்டு, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அடுத்த வாரம் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் உஷாகோவ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.