அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனே முக்கியம் என்றும், அதற்காக அதிக விலை கொடுக்கவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 25% வரியை ஏற்கெனவே விதித்து இருந்தார். அமெரிக்காவுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
வரி விதிப்பு 50 சதவீதம்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி பதில்
அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
விவசாயிகளின் நலனே எங்களுக்கு முக்கியம்
புதுடெல்லியில் நடந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி: எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முக்கியம். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்கு தெரியும். நான் அதற்கு தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்கு தயாராக உள்ளது என்றார். அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்யுமாறு கேட்ட அமெரிக்காவின் வேண்டுகோளை இந்தியா நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
