சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப்! 25% வரியால் அமெரிக்காவுக்கு ஆப்பு!
அமெரிக்காவின் புதிய சுங்க வரிகளால் அந்நாட்டு குடும்பங்களின் செலவு அதிகரிக்கும் என எஸ்பிஐ ஆய்வு கூறுகிறது. குறைந்த வருமான குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவர், இந்தியாவுக்குக் குறைந்த பாதிப்பு எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்க குடும்பங்களின் சராசரி செலவு
அமெரிக்காவால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள சுங்க வரிகளால், அந்நாட்டின் குடும்பங்களின் சராசரி செலவு அதிகரிக்கும் என பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வரிகளால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக, அமெரிக்க குடும்பங்களின் ஆண்டு செலவு குறுகிய காலத்தில் சுமார் $2,400 வரை உயரக்கூடும், இது இந்திய ரூபாயில் தோராயமாக ₹2 லட்சம் ஆகும்.
புதிய சுங்க வரிகளால் இரு நாடுகளும் சவால்களை எதிர்கொண்டாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீதான தாக்கம் இந்தியாவை விட அமெரிக்காவுக்கு தீவிரமாக இருக்கும் என்று எஸ்பிஐ அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
கூடுதல் சுமை
இந்தக் கூடுதல் சுமை அனைத்து குடும்பங்களுக்கும் சமமாக இருக்காது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்: குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு சுமார் $1,300 (சுமார் ₹1.08 லட்சம்) இழப்பு ஏற்படலாம். இது பணக்கார குடும்பங்களை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள்: அதிக வருமானம் உள்ள குடும்பங்கள் $5,000 (சுமார் ₹4.15 லட்சம்) வரை இழப்புகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், அவர்களின் ஒட்டுமொத்த நிதி நிலையில் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கம்
அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கை, இந்தியாவை விட அமெரிக்க பொருளாதாரத்தையே அதிகம் பாதிக்கும் என்று எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கான காரணங்களாக, அமெரிக்காவில் நிலவும் டாலரின் பலவீனம், அதிக பணவீக்கம் மற்றும் வரிகளால் ஏற்படும் விலை உயர்வு ஆகியவை கூறப்பட்டுள்ளன.
ஏற்கனவே குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி எதிர்பார்ப்புகளுடன் போராடி வரும் அமெரிக்கா, இந்த வர்த்தகக் கொள்கையால் மேலும் பாதிக்கப்படும். மின்னணு சாதனங்கள், வாகனங்கள், மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற இறக்குமதியை பெரிதும் சார்ந்த துறைகளில் விலை உயர்வு ஏற்படும்.
இந்தியாவுக்கு குறைவான பாதிப்பு
அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்கனவே அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வரிகளின் விளைவாக அது மேலும் உயரக்கூடும். இதன் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கியின் 2% பணவீக்க இலக்கை, 2026-ஆம் ஆண்டு வரையும் அமெரிக்கா அடைய முடியாமல் போகலாம் என்று அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த வரிகளால் ஏற்படும் அதிக உற்பத்திச் செலவு மற்றும் நுகர்வோர் தேவை குறைவு காரணமாக, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 40 முதல் 50 புள்ளிகள் வரை குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தாலும் (2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 20% பங்கு), இந்தியாவின் வர்த்தகக் கொள்கை பன்முகத்தன்மை கொண்டது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் முதல் 10 நாடுகள் சுமார் 53% மட்டுமே பங்களிப்பதால், அமெரிக்காவின் புதிய வரிகளின் தாக்கம் இந்தியாவுக்கு குறைவாகவே இருக்கும். பன்முகத்தன்மை கொண்ட இந்த வர்த்தகக் கொள்கை, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி செயல்திறனில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.