மியான்மர் எல்லையில் ட்ரோன் தாக்குதலா? ULFA குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
யுஎல்எஃப்ஏ(ஐ) அமைப்பு, மியான்மர் எல்லையில் உள்ள அதன் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதனை மறுத்துள்ளது.

மியான்மர் எல்லையில் தாக்குதல் நடதப்பட்டதா?
தடைசெய்யப்பட்ட யுஎல்எஃப்ஏ(ஐ) (ULFA-I) அமைப்பு, மியான்மர் எல்லையில் உள்ள அதன் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13, 2025) தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, யுஎல்எஃப்ஏ(ஐ) அமைப்பு, அதிகாலையில் பல நடமாடும் முகாம்கள் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஒரு மூத்த தலைவர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த தாக்குதல்களில் 19 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிடிஐ குவஹாத்தியில் உள்ள பாதுகாப்பு செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, இதுபோல ஒரு சம்பவம் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்தார். லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், "இந்திய ராணுவத்திடம் இதுபோன்ற ஒரு நடவடிக்கை குறித்த எந்தத் தகவலும் இல்லை" என்று கூறியுள்ளார்.
என்ஐஏ குற்றப்பத்திரிகை
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அசாமில் பல குண்டுவெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக யுஎல்எஃப்ஏ(ஐ) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 14ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (NIA), 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுவான யுஎல்எஃப்ஏ-வின் தலைவர் பரேஷ் பருவா, அபிஜித் கோகோய் மற்றும் ஜானு பருவா. ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன. மூவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் உள்ளன.
என்ஐஏ விசாரணை
கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில், திஸ்பூர் லாஸ்ட் கேட், குவஹாத்தி உள்பட அஸ்ஸாம் முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்த யுஎல்எஃப்ஏ(ஐ) சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. திஸ்பூர் லாஸ்ட் கேட்டில் குண்டுவைத்தவர்கள் இந்த மூன்று பேர்தான் எனவும் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கை செப்டம்பர் 2024 இல் என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட்து. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கத்துடனும், நாட்டின் மக்களிடையே பயங்கரவாதத்தைப் பரப்பும் நோக்கத்துடனும் இவர்கள் செயல்பட்டிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது.