பீகாரில் லாலு கூட்டணியை காலி செய்யும் மகன்..! 5 கத்துக்குட்டி கட்சிகளுடன் புதிய கூட்டணி!
பீகார் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ், ஐந்து கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை அறிவித்துள்ளார். சமீபத்தில் ஆர்.ஜே.டி.யில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேஜ் பிரதாப் யாதவ் அதிரடி அறிவிப்பு
பீகார் முன்னாள் அமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப் யாதவ், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஐந்து கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை அறிவித்துள்ளார். சமீபத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது பீகார் அரசியலில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
கூட்டணியில் 5 கட்சிகள்
தேஜ் பிரதாப் யாதவ், செவ்வாய்க்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எதிர்வரும் பீகார் தேர்தலில் தனது கூட்டணி பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். "விகாஸ் வஞ்சித் இன்சான் கட்சி (VVIP), போஜ்புரியா ஜன் மோர்ச்சா (BJM), பிரகதிஷீல் ஜனதா கட்சி (PJP), வாஜிப் அதிகார் கட்சி (WAP), சன்யுக்ட் கிசான் விகாஸ் கட்சி (SKVP)" ஆகிய ஐந்து கட்சிகளுடன் ஒரு புதிய கூட்டணியை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக நீதி, சமூக உரிமைகள், மற்றும் பீகாரின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கூட்டணி செயல்படும் என்று அவர் கூறினார். மேலும், இந்த கூட்டணிக்கான முழு ஆதரவை மக்கள் வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்.ஜே.டி.யில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பிரதாப்
லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப், அண்மையில் தனது தந்தை மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். இந்த நீக்கத்திற்குப் பிறகு, தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுடன் தனக்கு மோதலை ஏற்படுத்த சதி நடப்பதாக தேஜ் பிரதாப் குற்றம் சாட்டியிருந்தார்.
"என்னை கேலி செய்யலாம்"
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில், தான் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாகவும், 2020 வரை தான் வெற்றிபெற்ற மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் தேஜ் பிரதாப் அறிவித்தார்.
"மக்கள் என்னை கேலி செய்யலாம், ஆனால் நான் எனது பாதையில் செல்வேன். எங்களது கூட்டணி சமூக நீதி மற்றும் பீகாரின் மாற்றத்திற்காக உழைக்கும். மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்தால், ராம் மனோகர் லோகியா, கர்பூரி தாக்கூர் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுவோம்" என்று அவர் தெரிவித்தார்.
மக்களுடன் தேஜ் பிரதாப்
தனது "Team Tej Pratap Yadav" என்ற சமூக ஊடக தளம் மூலமாக மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தார்.
தேஜ் பிரதாப் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது சகோதரர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் பீகார் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.