- Home
- இந்தியா
- சர்வே என்னாச்சு? ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
சர்வே என்னாச்சு? ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள் குறித்து அமைக்கப்பட்ட தேசியப் பணிக்குழுவின் கேள்வித்தாளுக்கு பதிலளிக்காத சுமார் 57,000 நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர் தற்கொலைகள் - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள் குறித்த கேள்வித்தாளுக்குப் பதிலளிக்காத சுமார் 57,000 நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களின் மனநலன் மற்றும் வளாகப் பாதுகாப்பை உறுதிசெய்ய, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசியப் பணிக்குழுவின் (National Task Force) கேள்வித்தாளுக்கு, நாட்டில் உள்ள மொத்த உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) 58,000 நிறுவனங்களில் சுமார் 57,000 நிறுவனங்கள் இதுவரை பதிலளிக்காமல் உள்ளதைக் கண்ட நீதிபதிகள், மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்டனர்.
சாதிப் பாகுபாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள்
ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் மற்றும் என்ஐடிகள் போன்ற நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தைக் கையாள, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தேசியப் பணிக்குழுவை அமைத்தது.
இந்தக் கேள்வித்தாள், வளாகங்களில் நிலவும் சாதிப் பாகுபாடு, மாணவர்களை ஆதரிப்பதற்கான நிறுவன வழிமுறைகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை மையமாகக் கொண்டது.
அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும்
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, இந்தக் கேள்வித்தாளுக்கு நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தியது.
“மாணவர்களின் நலன் கருதியே இந்தக் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தேசியப் பணிக்குழு தனது இடைக்கால அறிக்கையை, இல்லையேல் இறுதி அறிக்கையையாவது சமர்ப்பிக்க, அனைத்து நிறுவனங்களும் முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே பலமுறை இந்த நிறுவனங்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ள நிலையிலும் ஒத்துழைக்காத காரணத்தால், மத்திய அரசு உடனடியாக மீண்டும் அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, இந்த ஆய்வில் பங்கேற்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
உச்ச நீதிமன்றம் அளிக்கும் கடைசி வாய்ப்பு
“இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்க இதுவே அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பு. தவறும் பட்சத்தில், நிறுவனங்கள் விரும்பாத மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என்பதை மத்திய அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் அமர்வு இறுதியாக எச்சரிக்கை விடுத்தது.
மனுதாரர்களாக, 2023-ல் தற்கொலை செய்துகொண்ட டெல்லி ஐஐடி மாணவர்கள் ஆயுஷ் ஆஷ்னா மற்றும் அனில் குமார் ஆகியோரின் பெற்றோரும், 2016 மற்றும் 2019-ல் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோரின் பெற்றோரும் உள்ளனர்.