இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்! ஸ்காட்ச் விஸ்கி செமையா விலை குறைய போகுது!
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து விவாதிக்க இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் நடைபெறும் இந்த சந்திப்பில், ஸ்காட்ச் விஸ்கி மீதான வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன.

இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (அக்டோபர் 8) இந்தியா வந்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். அவர், 128 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய வர்த்தகக் குழுவுடன் இந்தியா வந்தடைந்தார்.
மோடியுடன் ஸ்டார்மர் சந்திப்பு
இன்று மும்பை வந்தடைந்த கெய்ர் ஸ்டார்மர், நாளை (அக்டோபர் 9) டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளின் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிக் குறைப்புகள், முதலீடு மற்றும் விசா பிரச்னைகள் தீர்வு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட இந்த வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியர்களுக்கான விசா சிக்கல்கள் தீர்வு காணப்படும் என்றும், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், ஸ்காட்ச் விஸ்கி போன்ற பொருட்களின் மீதான வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்காட்ச் விஸ்கி விலை குறையும்
இங்கிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த ஒப்பந்தம் ஸ்காட்லாந்தின் பொருளாதாரத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 190 மில்லியன் யூரோ வருமானத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் சந்தையில் இங்கிலாந்தின் ஸ்காட்ச் விஸ்கி விற்பனை ஆண்டுக்கு 1 பில்லியன் யூரோ அளவுக்கு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் உள்ள சவால்கள்
இங்கிலாந்து பிரதமரின் இந்தியப் பயணம் குறித்துப் பேசிய ஸ்காட்லாந்திற்கான இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், “இந்தியாவுடனான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் ஸ்காட்ச் விஸ்கிக்குத்தான் பெரிய வெற்றி” என்றார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இதைச் செயல்படுத்துவதில் சில சவால்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் கையெழுத்தாகியுள்ள இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), பிரெக்ஸிட்டுக்குப் (Brexit) பிறகு இங்கிலாந்து மேற்கொள்ளும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.