சமஸ்கிருதம் ஒவ்வொரு வீட்டிலும் பேச வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் பேசப்பட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார். சமஸ்கிருதத்தைப் புரிந்துகொள்வதற்கும் சரளமாகப் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

சமஸ்கிருதத்தை ஒவ்வொரு வீட்டிலும் பேச வேண்டும்
சமஸ்கிருத மொழி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் போன்றது என்றும், அது ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும் மொழியாக மாற வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
நாக்பூரில் உள்ள காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசிய அவர், சமஸ்கிருதத்தைப் புரிந்துகொள்வதற்கும், அதில் சரளமாகப் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
"சமஸ்கிருதம் நமது உணர்வுகளை (பாவம்) வளர்க்கும் ஒரு மொழி. ஒவ்வொருவரும் இந்தப் பழமையான மொழியை அறிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். மேலும், சமஸ்கிருதத்தைப் பாதுகாப்பதற்கும், பரப்புவதற்கும் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சமஸ்கிருதத்திற்கு அரசு ஆதரவு
"சமஸ்கிருதத்திற்கு அரசு ஆதரவு கிடைக்குமென்றாலும், மக்களின் ஆதரவும் அவசியம். இது இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். அது மேலும் வளர வேண்டுமென்றால், மக்கள் அதை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும்," என்று மோகன் பகவத் கூறினார்.
சமஸ்கிருதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய வேண்டும் என்றும், அன்றாட வாழ்வில் அதை ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"தற்சார்பு மற்றும் சுய பலம் அடைவதில் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து உள்ளது. இதற்கு நாம் நமது அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்று பகவத் கூறினார்.
“இந்தியாவின் பலம் அதன் தற்சாற்புத் தன்மையில் உள்ளது. தற்சார்பு மூலமாக வரும் உரிமையுணர்வு என்பது தனித்துவமானது. அது மொழியின் மூலமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தை அறிவது என்பது இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கு சமம்” என்று அவர் குறிப்பிட்டார்.
உலகமே ஒரு குடும்பம்
மேற்கத்திய நாடுகள் 'உலகளாவிய சந்தை' (global market) பற்றி பேசுகின்றன, ஆனால் நாமோ 'வசுதைவ குடும்பகம்' (உலகமே ஒரு குடும்பம்) என்ற கருத்தைப் பற்றி பேசுகிறோம் என்று பகவத் கூறினார். மேற்கத்தியர்களின் 'உலகளாவிய சந்தை' என்ற எண்ணம் தற்போது தோல்வியடைந்துவிட்டது என்றும், 2023-ல் இந்தியா நடத்திய ஜி20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'வசுதைவ குடும்பகம்' என்பதில் இது தெளிவாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சமஸ்கிருதத்தின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைத்ததுடன், அந்த மொழியின் வளர்ச்சிக்காகத் தனது அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்தார்.

