சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில்! கேரளா அரசு அதிரடி அறிவிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்துள்ளார்.
Sabarimala
சபரிமலை மண்டல - மகரவிளக்கு சீசனுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அனைத்து பக்தர்களுக்கும் எளிதான தரிசனம் கிடைக்கும். இந்த முறை சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இலவச காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ரூ.5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். பக்தர்கள் இறந்தால், உடலை சொந்த ஊருக்கு அனுப்ப தேவசம் போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்.
Sabarimala
பொதுப்பணித்துறை சாலைகளின் பராமரிப்பு பணிகள் உட்பட அனைத்து பணிகளும் நவம்பர் 10-ம் தேதிக்குள் முடிவடையும். 1000 விசுத்தி சேனா உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள். முன்பு சபரிமலையில் பணிபுரிந்த அனுபவமுள்ள அதிகாரிகள் உட்பட 13600 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
Sabarimala
மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் ஓய்வெடுக்க 1000 இரும்பு நாற்காலிகள் அமைக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படும். மின் கழிப்பறை வசதியும் இருக்கும். பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சபரிமலைக்கென சிறப்பு பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்துள்ளது. பத்தனம்திட்டா பேரிடர் மேலாண்மைக் குழுவிற்கு 17 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் பணிகளுக்காக 90 வருவாய்த்துறை ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
Sabarimala
உணவுப் பொருட்களின் விலை ஆறு மொழிகளில் காட்சிப்படுத்தப்படும். கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கவரேஜை அதிகரிக்க பி.எஸ்.என்.எல். 22 செல்போன் கோபுரங்களை அமைக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சுகாதாரத் துறை விழிப்புணர்வு பிரசாரம் செய்யும். துணி கழிவுகளை அகற்ற பசுமை காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். குறுஞ்செய்தி மூலம் பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்க தேவசம் போர்டு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
Sabarimala
நிலக்கல்லில் 10,000 வாகனங்களை நிறுத்த இந்த முறை வசதி செய்யப்படும். கடந்த முறை 7500 வாகனங்களை நிறுத்தும் வகையில் தயார் படுத்தப்பட்டிருந்தது. இந்த முறை கூடுதலாக 2500 வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படும். நிலக்கல்லில் பார்க்கிங் முழுவதும் ஃபாஸ்ட் டேக் மூலம்தான். பம்பா ஹில்டாப், சக்குப்பாலம் ஆகிய இடங்களில் மாத பூஜையின்போது பார்க்கிங்கிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இங்கு 2000 வாகனங்களை நிறுத்தலாம். நீதிமன்ற அனுமதியுடன் மண்டல மகரவிளக்கு சீசனில் இங்கு பார்க்கிங் வசதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். எருமேலியில் வீட்டு வசதி வாரியத்தின் வசம் உள்ள ஆறரை ஏக்கர் நிலம் பார்க்கிங்கிற்காக பயன்படுத்தப்படும்.
வார்டுவல் வரிசைக்கு வெளியே பத்தாயிரம் பக்தர்களை அனுமதிப்பார்கள். வரும் பக்தர்களை யாரையும் திருப்பி அனுப்ப மாட்டார்கள். மூன்று மையங்களில் ஆவணங்களை சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.