மாநிலங்களவைக்கு புதிய எம்.பி.க்கள் நியமனம்! யார் இந்த 4 பேர்?
முன்னாள் வெளியுறவுச் செயலாளர், சிறப்பு வழக்கறிஞர், பாஜக தலைவர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆகியோர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.

நியமன எம்.பி.க்கள்
முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம், கேரள பாஜக தலைவர் சி. சதானந்தன் மாஸ்டர், மற்றும் வரலாற்றாசிரியர் மீனாட்சி ஜெயின் ஆகிய நான்கு முக்கிய பிரமுகர்களை மாநிலங்களவைக்கு அரசு நியமனம் செய்துள்ளது.
நியமன உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அனைத்து அதிகாரங்களையும் சலுகைகளையும் அனுபவிப்பார்கள். இருப்பினும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
உஜ்வல் நிகாம்
சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்-க்கு எதிராக மகாராஷ்டிராவைப் பிரதிநிதித்துவப்படுத்தியபோது பரவலாக அறியப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மும்பை வட மத்திய தொகுதியில் இவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சதானந்தன் மாஸ்டர்
இவர் பாஜகவின் கேரளப் பிரிவில் ஒரு முக்கிய பிரமுகராக உள்ளார். 1994 ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்த சதானந்தன் மாஸ்டரின் இரு கால்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களால் வெட்டப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா
ஷ்ரிங்லா 2020 முதல் 2022 வரை வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றினார். 2019-2020 காலகட்டத்தில் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதராகவும் இருந்தார். 2019 இல் டெக்சாஸில் நடைபெற்ற "ஹவுடி மோடி" நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். 2023ஆம் ஆண்டில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தியபோது தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். டார்ஜிலிங்கைச் சேர்ந்த இவர், கூர்க்கா சமூகத்தின் முக்கியப் பிரமுகராக அறியப்படுகிறார்.
மீனாட்சி ஜெயின்
மீனாட்சி ஜெயின் ஒரு இந்திய அரசியல் திறனாய்வாளர் மற்றும் வரலாற்றாசிரியர். இவர் டெல்லி கர்கி கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 2014ஆம் ஆண்டில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் உறுப்பினராக இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். இப்போது மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நியமன உறுப்பினர்கள்
அரசியலமைப்புச் சட்டத்தின் 80வது பிரிவு நியமன உறுப்பினர்கள் பற்றிக் கூறுகிறது. குடியரசுத் தலைவரால், 3வது உட்பிரிவின்படி நியமிக்கப்படும் 12 உறுப்பினர்கள் மற்றும் 238 க்கு மேற்படாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மாநிலங்களவையில் அங்கம் வகிப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 80 இன் கீழ் உள்ள 3வது உட்பிரிவு நியமன எம்.பி.க்களுக்கான தகுதிகளைக் கூறுகிறது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களாகவும் அனுபவம் மிக்கவர்களாகவும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

