கிராமத்துக்கு சாலை அமைத்துக் கொடுத்த கர்ப்பிணி பெண்! யூடியூப் போராட்டம் சக்சஸ்!
மத்தியப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சமூக ஊடகப் பிரச்சாரம் மூலம் தனது கிராமத்திற்கு சாலை அமைக்க அரசு நிதியைப் பெற்றுள்ளார். லீலா சாஹு என்ற பெண் தனது யூடியூப் சேனல் மூலம் சாலையின் மோசமான நிலையை வெளிப்படுத்தியதற்கு பலன் கிடைத்துள்ளது.

யார் இந்த லீலா சாஹு?
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மேற்கொண்ட தொடர்ச்சியான சமூக ஊடகப் பிரச்சாரம், இறுதியாக அரசு நிதியுதவி ஒதுக்கி, அக்கிராமத்தில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
22 வயதான லீலா சாஹு என்ற கர்ப்பிணிப் பெண், சித்தி மாவட்டத் தலைமையகத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள குட்டி குர்த் கிராமத்தில் உள்ள சாலையின் மோசமான நிலையை தனது யூடியூப் சேனல் மூலம் பல வாரங்களாக வெளிப்படுத்தி வந்தார். இந்த முயற்சியானது உள்ளூர் எம்.பி. டாக்டர் ராஜேஷ் மிஸ்ராவின் கேலிக்கு ஆளானது. "அவரைத் தூக்கிவிடுவோம்" என்று அவர் கேலியாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இருப்பினும், சாலை அமைக்கப்படும் என்றும் அவர் அவசரமாகக் கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து 'உணர்வற்று' இருந்ததாகப் பல தரப்பினரிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை ஈர்த்தது.
கர்ப்பிணிப் பெண்ணின் போராட்டம்
இந்நிலையில், திங்கள்கிழமை அன்று, சேறும் சகதியுமான சாலை சமன் செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக லீலா சாஹு தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.
23 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட லீலா சாஹு, "சாலை கட்டுமானப் பணிகள் தொடங்கியிருப்பது மிகப்பெரிய நிம்மதியை அளிக்கிறது. நான் இப்போது ஒன்பதாவது மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனது பிரசவத்திற்காக சித்தி மாவட்ட மருத்துவமனைக்கு எனது கிராமத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் செல்ல முடியும் என்று நம்புகிறேன்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. அலட்சியம்
தனது கிராமத்தில் தற்போது குறைந்தபட்சம் ஆறு பெண்கள் வெவ்வேறு கர்ப்ப நிலைகளில் இருப்பதாகவும் அவர் கூறினார். எம்.எல்.ஏ.வின் தொகுதி நிதியிலிருந்து இந்த சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ.வும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அஜெய் சிங்கை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மத்தியப் பிரதேசத்தின் மாண்டுவில் உள்ள கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்தார்.
கிராம சாலைகள் திட்டம்
மத்தியப் பிரதேசத்தில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் (PMGSY) பொது மேலாளர் ஜே.பி. மிஸ்ரா கூறுகையில், தனது துறை இந்த சாலை கட்டுமானத்தில் ஈடுபடவில்லை என்றார்.
2022ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் அறிமுகமான லீலா சாஹு, ஆரம்பத்தில் கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்ட வீடியோக்களை உருவாக்கி வந்தார். பின்னர் 2024ஆம் ஆண்டில், தனது பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி உள்ளூர் சிக்கல்கள் குறித்த வீடியோக்களைப் பதவிடத் தொடங்கினார்.