சர்வ நாசம் செய்த உத்தரகண்ட் வெள்ளம்... பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்
உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்
உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இந்த மேக வெடிப்பு நிகழ்ந்தது. இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
"உத்தரகாசியின் தராலியில் ஏற்பட்ட இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன்," என்று பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநில அரசின் மேற்பார்வையில், நிவாரணம் மற்றும் மீட்புக் குழுக்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன என்றும், மக்களுக்கு உதவி செய்வதில் எந்தக் குறையும் வைக்கப்படாது என்றும் உறுதியளித்தார்.
உத்தரகண்ட் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் மாயம்
கீர்க் கங்கா நதியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி கிராமத்தில் பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலபேர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா, தராலி கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். "ஒரு பெரிய அளவிலான வெள்ள அலை அந்தப் பகுதியைத் தாக்கியது. உயிர் மற்றும் உடைமைச் சேதங்களின் அளவை நாங்கள் தற்போது மதிப்பிட்டு வருகிறோம்," என்று ஆர்யா தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் தீவிரம்
மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் குழுக்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புமாறு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளத்தின் சீற்றத்தைக் காட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. தராலி கிராமத்தின் வழியாக வெள்ளம் பாய்ந்து, வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளை அடித்துச் செல்லும் காட்சிகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. சில ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் வெள்ளத்தில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.