5 நாடுகளில் 8 நாட்கள்: நாளை தொடங்குகிறது பிரதமர் மோடியின் நீண்ட பயணம்!
பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 9 வரை பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு, இருதரப்பு சந்திப்புகள் மற்றும் நாடாளுமன்ற உரைகள் ஆகியவை அடங்கும்.

மோடியின் நீண்ட வெளிநாட்டுப் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்காக, அவர் நாளை (ஜூலை 2) முதல் ஜூலை 9-ம் தேதி வரையிலான 8 நாட்களில், பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமரின் இந்த நீண்டகால பயணம் அமைகிறது.
5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
பிரதமர் மோடி ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் அமைந்துள்ள கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு செல்கிறார். 5 நாடுகளுக்கு பிரதமர் செல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு, 2016-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய 5 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கானா மற்றும் டிரினிடாட் அண்ட் டொபாகோ
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் மோடி ஜூலை 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் கானாவில் பயணம் செய்வார். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கானாவுக்குச் செல்லும் முதல் பயணம் இது என்பதுடன், பிரதமர் மோடிக்கும் இது கானாவுக்கான முதல் பயணம் ஆகும். தொடர்ந்து, ஜூலை 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் 2 நாட்கள் டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜென்டினா மற்றும் பிரேசில் பிரிக்ஸ் மாநாடு
இதனைத் தொடர்ந்து, ஜூலை 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் 2 நாட்கள் அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்வார். இதன் பின்னர், ஜூலை 5 முதல் 8 வரை 3 நாட்கள் பிரேசிலில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா அழைப்பின் பேரில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மை உறவை வலுப்படுத்துதல், பொறுப்புடனான ஏ.ஐ. தொழில்நுட்ப பயன்பாடு, பருவநிலை மாற்ற செயல்பாடு, உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் இந்தியாவின் பார்வைகளை அவர் பகிர்ந்து கொள்கிறார். உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்துவார்.
நமீபியா பயணம்
இறுதியாக, பிரேசிலில் இருந்து நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அப்போது, அந்நாட்டு ஜனாதிபதி நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். நமீபியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம், உலகளாவிய தெற்குப் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை மேலும் விரிவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.