பிரதமர் மோடிக்கு கானாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதான 'தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா' வழங்கப்பட்டது. இந்த விருது இந்தியா-கானா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு பொறுப்பு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 'தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா' (The Officer of the Order of the Star of Ghana) என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருது, இந்தியா-கானா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு பொறுப்பு என்று பிரதமர் மோடி தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.
கானா அதிபர் ஜான் மஹாமாவால் வழங்கப்பட்ட இந்த விருதை, "எனக்கும் ஒரு பெரிய பெருமையும், கௌரவமும்" என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்த விருதை இரு நாடுகளின் இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கும், கானா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வரலாற்று உறவுகளுக்கும், அவற்றின் செழுமையான கலாச்சார மரபுகளுக்கும், பன்முகத்தன்மைக்கும் அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரகாசமான எதிர்காலம்
இந்த விருத்து குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், "கானா மக்களுக்கும், அரசுக்கும் 'தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா' விருதை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இந்த கௌரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம், அவர்களின் லட்சியங்கள், நமது வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவுக்கும் கானாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
"இந்த கௌரவம் ஒரு பொறுப்பு; இந்தியா-கானா நட்புறவை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து உழைக்க வேண்டும். இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணை நிற்கும், நம்பகமான நண்பராகவும், வளர்ச்சி பங்காளராகவும் தொடர்ந்து பங்களிக்கும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்குச் சென்றிராத நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகையின் போது இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பதிவில், பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இதுவரை பிரதமர் மோடிக்கு 24 உலகளாவிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை மட்டுமல்லாமல், அவரது தொலைநோக்குப் பார்வையிலான வழிகாட்டுதலின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் மதிப்பையும் பிரதிபலிக்கிறது" என்று மாளவியா கூறினார்.
கானா மக்களுக்கும் அரசுக்கும் நன்றி
"தனித்துவமான ராஜதந்திரம் மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவம்" ஆகியவற்றைப் பாராட்டி பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கௌரவத்துக்காக கானா மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், "இரு நாடுகளின் பொதுவான ஜனநாயக விழுமியங்களும், மரபுகளும் கூட்டாண்மையை தொடர்ந்து வளர்க்கும்" என்று குறிப்பிட்டார். இந்த விருது "இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் ஆழப்படுத்தி, இருதரப்பு உறவுகளைத் தழுவி முன்னேற புதிய பொறுப்பை தனக்கு அளிக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

