- Home
- இந்தியா
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியாகியுள்ளது. இதன் படி தற்போது பங்களிப்பு ஓய்வூதிய தொகை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரசும் அரசு ஊழியர்களும்
அரசு ஊழியர்கள் தான் மக்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக உள்ளனர். அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கு சென்று சேர முக்கிய கருவியாக உள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் ஆட்சியை மாற்றக்கூடிய அளவிற்கு சக்தி படைத்தவர்கள். தமிழகத்தை பொறுத்த வரை தமிழ்நாட்டில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 9,42,522 ஆகும்.
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசைப் போல உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனையேற்று கடந்த 2024 ஜூலை முதல் 50% இருந்த அகவிலைப்படி 53% ஆக உயர்த்தப்பட்டது,
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்
மேலும் 2025 ஜனவரி-ஏப்ரல் மாதங்களுக்கான 2% உயர்வு நிலுவைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். அடுத்ததாக ஈட்டிய விடுப்பு சரண் சலுகையானது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு அமல் செய்யப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
2025 அக்டோபர் 1 முதல் இது மீண்டும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் வணிகவரித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஊழியர்களுக்கிடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள்
இந்த கோரிக்கைகளை விட ஓய்வூதிய கோரிக்கை தான் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அந்த வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் 01.04.2003-க்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.
ஊழியரின் கடைசி ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு 2025 செப்டம்பர் மாதத்திற்குள் தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியம்
எனவே தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 07.07.2025 அன்று காலை 10 மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) வெளியிடப்படுகிறது.
பங்களிப்பு ஓய்வூதியம் - களஞ்சியம் செயலி
அத்துறையின் http://cps.tn.gov.in/public மற்றும் www.karuvoolam.tn.gov.in (களஞ்சியம்) பணியாளர் சுய சேவை (Employee Self Service) என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தின் தொகையினை களஞ்சியம் கைப்பேசி செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.