திருப்பதி முதல் ஸ்ரீரங்கம் வரை.. ஒரே ரயிலில் தரிசனம் செய்ய புதிய வசதி! பக்தர்கள் குஷி!
திருப்பதி, திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களை இணைக்கும் புதிய வாராந்திர ரயில் சேவை பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரே டிக்கெட்டில் 3 முக்கிய தரிசன தலங்கள்
தென்னிந்திய ஆன்மிக பயணத்தை விரும்பும் பக்தர்களுக்கு முக்கியமான ரயில்வே அப்டேட் வெளியாகியுள்ளது. இதுவரை சிறப்பு சேவையாக இயக்கப்பட்டு வந்த சேர்லப்பள்ளி – திருச்சிராப்பள்ளி ரயில், தற்போது நிரந்தர வாராந்திர எக்ஸ்பிரஸ் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பின்படி, 17077 மற்றும் 17078 என்ற எண்களுடன் இந்த சேவை ஜூலை 7 முதல் வழக்கமான இயக்கம் தொடங்குகிறது.
திருப்பதி
திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் செல்லும் பயணிகள் பலர் இதுவரை இடைநிலை ரயில் மாற்றம் மற்றும் நீண்ட பயண சிரமங்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக குடும்பத்துடன் தரிசன பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு நேரடி இணைப்பு இல்லாத ஒரு சவாலாக இருந்தது. இந்த புதிய வாரந்திர சேவை அந்த சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம்
17077 சேர்லப்பள்ளி – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 5.20 மணிக்கு புறப்படுகிறது. நல்கொண்டா, மிரியாலகுடா, நடிகுடி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், நெல்லூர் மற்றும் கூடூர் வழியாக பயணிக்கும் இந்த ரயில், மறுநாள் காலை 8.50 மணிக்கு திருப்பதியை அடைகிறது. ஏழுமலையான் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இது கூடுதல் வசதியாக அமையும்.
ரயில் மாற்றம் இல்லாமல் தரிசனம்
அதன்பின் ரயில் ரேணிகுண்டா, சித்தூர், காட்பாடி மற்றும் திருவண்ணாமலை வழியாக பயணிக்கிறது. அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இந்த இணைப்பு பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் மற்றும் ஸ்ரீரங்கம் வழியாக மாலை 6.45 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடைகிறது. திரும்பும் சேவையான 17078 திருச்சிராப்பள்ளி – சேர்லப்பள்ளி எக்ஸ்பிரஸ், ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 9.30 மணிக்கு புறப்படும்.
திருவண்ணாமலை
ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி வழியாக பயணித்து வியாழக்கிழமை இரவு சேர்லப்பள்ளியை அடையும். 2ஏசி, 3ஏசி, ஸ்லீப்பர் மற்றும் பொதுப்பயண பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சேவை, சாதாரண ரயில் வசதியைத் தாண்டி தென்னிந்திய பக்தி சுற்றுலாவுக்கான புதிய யாத்திரை பாதையாக உருவெடுக்கலாம் என ரயில்வே எதிர்பார்க்கப்படுகிறது.

