100 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை! அதிக பாதிப்பு எங்கே?
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால் மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் ரயில், விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.

Heavy rain in Mumbai
இந்தியாவின் வர்த்ததக தலைநகரான மும்பையில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து வருகிறது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து மட்டுமின்றி, ரயில், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தை விட மிகவும் முன்னதாகவே வந்துவிட்டது. இதனால் தான் மும்பையில் தொடர் கனமழை கொட்டி வருகிறது. அதுவும் மே மாதத்தில் மட்டும் இதுவரை 295 மி.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மும்பையில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை
இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதை "அதிக மழைப்பொழிவு" என்று வகைப்படுத்தியுள்ளது. இதுவரை 439 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கொலாபா ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அதிகப்பட்சமாக சாண்டா குரூஸில் 272 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நரிமன் பாயிண்டில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 104 மி.மீ மழை கொட்டித் தீர்துள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்
விடாமல் கொட்டி வரும் கனமழை காரணமாக மும்பை நகரம் மொத்தமாக முடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
அண்மையில் திறக்கப்பட்ட ஆச்சார்யா அத்ரே சௌக் மெட்ரோ நிலையமும் தண்ணீரில் மூழ்கியது, மேலும் மந்திராலயத்திற்குச் செல்லும் சாலையும் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியது.
ரயில் போக்குவரத்து முடங்கியது
தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் முன்பு நீர் தேங்காத பகுதிகளில் கூட தண்ணீர் தேங்கியது. ஆச்சார்யா அத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திலிருந்து மந்த்ராலயம் வரையிலான சாலைகள் தண்ணீரில் மூழ்கின.
கனமழை காரணமாக மும்பையின் உயிர்நாடியான புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வேயின் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 18 மேற்கு ரயில்வே சேவைகள் முடங்கியுள்ளன.
விமான போக்குவரத்தும் பாதிப்பு
மேலும் கனமழையால் மும்பை விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் அகமதாபாத்-மும்பை விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. கோவாவிலிருந்து வந்த விமானம் இந்தூருக்கு திருப்பி விடப்பட்டது.
இதேபோல் பல்வேறு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்தும் முடங்கியது. பல்வேறு இடங்களில் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.