கோழிக்கோடு மற்றும் ஆலுவாவில் ரயில் பாதையில் மரங்கள் விழுந்ததால் ரயில் சேவை பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. நல்லளம் அரிக்காடு பாதையில் மரங்களும் வீடுகளின் மேற்கூரைகளும் விழுந்ததால் ஆறு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. 

கேரளாவில் கொட்டும் கன மழை : தென்மேற்கு பருவமழை தொடக்கமே அதிரடியாக உள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையோடு தொடங்கிய மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோழிக்கோடு மற்றும் ஆலுவாவில் ரயில் பாதையில் மரங்கள் விழுந்ததால், ரயில் சேவை பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. கோழிக்கோடு நல்லளம் அரிக்காடு ரயில் பாதையில் மரங்களும் வீடுகளின் மேற்கூரையும் விழுந்ததால், போக்குவரத்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாகத் தடைபட்டது.

ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரங்கள்

மூன்று பெரிய மரங்களும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் பாலத்தில் விழுந்தன. இதனால் வட கேரளாவுக்கான பல ரயில்களின் சேவை தாமதமானது. போக்குவரத்து மீட்டெடுக்கப்பட்டாலும், பல ரயில்கள் மூன்று, நான்கு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இரவு 12.50 மணிக்கு ஷொர்ணூரில் வர வேண்டிய மங்களூர் - திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ் அதிகாலை 5.45 மணிக்குத்தான் வந்தது.

எர்ணாகுளம் அம்பாட்டுக்காவில் மெட்ரோ நிலையம் அருகே ரயில் பாதையில் மரம் விழுந்ததால், நான்கு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று இரவு எட்டு மணியளவில் பாதைக்கு அருகிலிருந்த ஆலமரம் விழுந்தது. இரண்டு பாதைகளிலும் மின்சாரக் கம்பியில் மரம் விழுந்தது. ரயில்வே, தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றினர். பல ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்

சென்னை-மங்களூர் மெயில்

கோழிக்கோடு-ஷொர்ணூர் பயணிகள் ரயில்

திருவனந்தபுரம்-மங்களூர் மலபார் எக்ஸ்பிரஸ்

அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ்

நிஜாமுதீன் - எர்ணாகுளம் மங்களா எக்ஸ்பிரஸ்

குருவாயூர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

ராஜ்யராணி எக்ஸ்பிரஸ்

அமிர்தசரஸ் - திருவனந்தபுரம் வடக்கு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

எர்ணாகுளத்தில் ரயில் பாதையில் விழுந்த மரம் முழுமையாக அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானதாக ரயில்வே அறிவித்துள்ளது.