- Home
- இந்தியா
- இனி 33 மார்க் எடுத்தாலே 10ம் வகுப்பில் பாஸ்.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்! அமைச்சரின் விளக்கமும்!
இனி 33 மார்க் எடுத்தாலே 10ம் வகுப்பில் பாஸ்.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்! அமைச்சரின் விளக்கமும்!
கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 35லிருந்து 33ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு மாணவர்கள்
மாணவர்களுக்கு கல்வி தான் ரொம்ப முக்கியம். எனவே எல்கேஜி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு தான் முதல் பொதுத்தேர்வு என்பதால் ஒரு வித பயத்தோடும், பதற்றத்தோடும் தேர்வை எழுதுவார்கள். அந்த வகையில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற 35 மதிப்பெண்கள் பாஸ் மார்க்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 35 மதிப்பெண்கள் என்பதை 33 மதிப்பெண்களாக குறைத்து கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா
இதுதொடர்பாக எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 35லிருந்து 33ஆக குறைக்கும் அரசின் முடிவு குறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். இந்த முடிவு மாநில மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். வேறு பல மாநிலங்களில் மாணவர்கள் 30 மதிப்பெண்களிலேயே தேர்ச்சி பெறுகிறார்கள். அந்த மாநில மாணவர்கள் மருத்துவமனைகளிலும், மற்ற முக்கிய துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அங்கு இந்த அளவுகோல் எந்த தடையாகவும் இல்லை. நம் மாணவர்களுக்கு மட்டும் நாம் தேர்ச்சி மதிப்பெண்ணை அதிகமாக வைத்திருந்ததால் சிரமம் ஏற்பட்டது என்றார்.
தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு, மாணவர்களுக்கு நன்மை
நாங்கள் செய்தது மாணவர்களின் எதிர்காலத்திற்காக. தேர்ச்சி அளவுகோலை 33ஆக குறைப்பதால், மாணவர்களுக்கு தடையாக இருந்த ஒரு பெரிய இடைவெளி பிரச்சனை நீங்கும். இது நன்மையே தவிர தீமை அல்ல என்று கூறினார்.
7ம் வகுப்பு படித்தால் டிரைவர் வேலை; இப்போது எஸ்எஸ்எல்சி அவசியம்
முன்பெல்லாம் ஓட்டுநர் ஆவதற்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்று பல பதவிகளுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி கட்டாயம். அத்தகைய இளைஞர்களுக்கு இந்த மதிப்பெண் குறைப்பு முடிவு உதவியாக இருக்கும் என்று விளக்கமளித்தார். தகுதி முக்கியம் தான். ஆனால் கிராமப்புற குழந்தைகள் கல்வியில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிதாக்குவதில் தவறில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

