'ஏழைங்களின் டாக்டர்' காலமானார்! 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்!
கண்ணூரில் ஐந்து தசாப்தங்களாக இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஏ.கே. ரெய்ரு கோபால் காலமானார். வறியவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த இவர், மக்களால் பெரிதும் போற்றப்பட்டார்.

இரண்டு ரூபாய் டாக்டர் ரெய்ரு கோபால்!
கேரள மாநிலம் கண்ணூரில், ‘இரண்டு ரூபாய் டாக்டர்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ஏ.கே. ரெய்ரு கோபால், தனது 80-வது வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார். ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாகக் கண்ணூர் மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து வந்த இவர், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், டாக்டர் கோபாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களுக்கும், ஏழைகளுக்கும் குறைந்த செலவில் மருத்துவ சேவை வழங்குவதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பை முதல்வர் பாராட்டியுள்ளார்.
அரை நூற்றாண்டு சேவை
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக, டாக்டர் கோபால் ஒரு நோயாளிக்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்தார். பின்னர், அந்தக் கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டது. வறியவர்களுக்கு அவரது மருத்துவமனை ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருந்தது. பல நேரங்களில், அவர் இலவசமாகவே ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கினார். அவரது சேவையைப் பற்றிக் கேள்விப்பட்டு, தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் அவரை நாடி வந்தனர்.
உடல்நலக் குறைவு காரணமாக, 2024-ம் ஆண்டு வரைதான் அவர் நோயாளிகளைப் பார்த்தார். அதன் பிறகு, அவர் தனது கண்ணூர் தானா வீட்டிற்கு வெளியே, "எனக்கு இனி வேலை செய்ய உடல்நலம் இல்லை. எனவே, ஆலோசனை வழங்குவதையும், மருந்து கொடுப்பதையும் நிறுத்துகிறேன்" என்று ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருந்தார். ஆனாலும், தன்னால் முடிந்தபோதெல்லாம் அவர் மக்களுக்குச் சேவை செய்வதைத் தொடர்ந்தார்.
ஏழைகளுக்கு இலவச மருத்துவம்
ஆரம்பத்தில், அவர் தலப்பு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து மருத்துவ சேவை செய்தார். அப்போது வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றார். கட்டணம் கொடுக்க முடியாதவர்களிடம் பணம் வாங்குவதில்லை. ஏழ்மையானவர்களுக்கு இலவசமாக மருந்தும் கொடுப்பார்.
தந்தையின் வார்த்தைகள்
டாக்டர் ரெய்ரு கோபாலின் சேவை தேசிய அளவில் கவனம் பெற்றது. இவரது மருத்துவமனை அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டது. தனது தந்தையான ஏ.ஜி. நம்பியாரின், "பணம் சம்பாதிப்பதற்கு வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன" என்ற வார்த்தைகளைக் கேட்டு, குறைந்த கட்டணத்தில் சேவை செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அவரது வாழ்நாளின் இறுதியில், அவர் கிட்டத்தட்ட 18 லட்சம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த இணையற்ற சேவை, ஒரு அன்பான டாக்டரின் மறைவோடு முடிவுக்கு வந்தது.
குடும்பம்:
டாக்டர் ரெய்ரு கோபாலின் தந்தை ஏ.ஜி. நம்பியாரும் ஒரு மருத்துவர். அம்மா லக்ஷ்மிகுட்டி. மனைவி பி.ஓ. சகுந்தலா. டாக்டர் கோபாலுக்கு பாலகோபால், வித்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் பாலகோபாலின் மனைவி துஷாராவும் மருத்துவர்.