காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..! அலறிய படி உடல் கருகி உயிரிழந்த 20 பேர்! நடந்தது என்ன?
ஜோத்பூர் சென்ற ஏசி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, ஏசி பேருந்துகளில் இருக்க வேண்டிய தீயணைப்பான்கள், அவசர வழிகள் போன்ற முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.

ஏசி ஸ்லீப்பர் பேருந்து
ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் நோக்கி ஏசி ஸ்லீப்பர் பேருந்து 57 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பேருந்து போர் அருங்காட்சியகம் அருகே தையத் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
20 பேர் உடல் கருகி பலி
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவோரில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிரதமர் மோடி இரங்கல்
மேலும் உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இழப்பீடு தொகையை அறிவித்துள்ளார். உயிரிழந்த குடும்பத்தினருக்கும் ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஏசி பேருந்துகளில் இருக்க வேண்டிய பாதுகாப்பு
ஏசி பேருந்துகளில் இருக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
* தீயணைப்பான்கள்: பேருந்தில் குறைந்தது இரண்டு, ஒன்று முன்பக்கமும் மற்றொன்று பின்பக்கமும்.
* அவசர வழி: மக்கள் வெளியேற குறைந்தது ஒரு கதவு மற்றும் ஜன்னல்கள்.
* கண்ணாடி உடைக்கும் சுத்தியல்: ஜன்னல் கண்ணாடியை உடைக்க.
* தீயைத் தாங்கும் பொருட்கள்: இருக்கைகள், திரைச்சீலைகள் மற்றும் வயரிங் தீயை எதிர்க்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
* அவசரகால விளக்குகள்: மின்சாரம் தடைபட்டால் விளக்குகள்.
* சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங்: பேருந்தைக் கண்காணிக்க மற்றும் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறிய.
* தானியங்கி தீ எச்சரிக்கை சென்சார்: தீ அல்லது புகை பரவினால் அலாரம் ஒலிக்கும்.
* வேகக் கட்டுப்பாட்டுக் கருவி: பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த.
* RTO பாதுகாப்பு தணிக்கை: ஒவ்வொரு 6 மாதங்களுக்கும்.