சத்தீஸ்கரில் முடிவுக்கு வருகிறதா நக்சல்களின் அட்டகாசம்?
சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்பு படை வீரர்களின் என்கவுன்ட்டர்களும், தேடுதல் வேட்டைகளும் தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் பல நக்சல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
- FB
- TW
- Linkdin
Follow Us

Naxal Operaion in Chattishgarh
மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட இடதுசாரி தீவிரவாதத்தின் ஒரு வடிவமே நக்சலிசமாகும். இது ஆயுதமேந்திய கிளர்ச்சி (வன்முறை மற்றும் கொரில்லா போர்) மூலம் அரசை கவிழ்க்க முயற்சிக்கிறது. நக்சலிசம் என்ற சொல் மேற்கு வங்காளத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில் இருந்து பெறப்பட்டது. அங்கு சுரண்டல் நில உரிமையாளர்களுக்கு எதிராக 1967-ம் ஆண்டு விவசாயிகள் கிளர்ச்சி நடத்தினர். பின்னர் இது இந்தியா முழுவதும் பல மாநிலங்களை பாதிக்கும் ஒரு சிக்கலான கிளர்ச்சியாக உருவெடுத்தது.
ஆப்ரேஷன் கிரீன் ஹண்ட்
இந்திய மாவோயிஸ்டுகள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்) இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வன்முறையான மாவோயிஸ்ட் குழுவாகும். இவர்கள் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் பீகார் உள்ளிட்ட பகுதிகளில் பரவி காணப்படுகின்றனர். மாவோயிஸ்டுகளை அழிப்பதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆப்ரேஷன் கிரீன் ஹண்ட்-ஐ தொடங்கினார். இது மத்திய அரசும், துணை ராணுவப் படையும் இணைந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்திய முழு அளவிலான தாக்குதலாகும். 2009-ம் ஆண்டு நவம்பரில் ‘சிவப்பு நடைபாதை’ என்று அழைக்கப்படும் நக்சல் ஆதிக்கம் நிறைந்த ஐந்து மாநிலங்களில் இருந்து இந்த ஆபரேஷன் துவங்கியது.
ஆபரேஷன் காகர்
ஆபரேஷன் கிரீன் ஹண்ட் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக நக்சலைட்டுகளின் செல்வாக்கு கணிசமாக குறைந்தது. இருப்பினும் நக்சல்களை முற்றிலும் அழிக்க முடியாத சூழல் நிலவுகிறது. நக்சலைட் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையிலும், நக்சலைட்டுகளால் எந்த குடிமகனும் உயிரிழக்க கூடாது என்பதை உறுதி செய்யும் வகையிலும், 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்க இலக்க நிர்ணயித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் காகரை அறிவித்தார். இது நக்சல்களை முற்றிலும் ஒழிப்பதையும், மாவோயிசத்தின் அரசியல் சித்தாந்தத்தை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது.
முக்கிய நக்சல் தலைவன் படுகொலை
ஆபரேஷன் காகரின் ஒரு பகுதியாக 2025-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சத்தீஸ்கரில் 140-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மே 21, 2025 சத்தீஸ்கரின் நாராயண்ப்பூர் வனப்பகுதியில் உள்ள அபுஜ்மத் காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 27 முதல் 30 நக்சல்கள் வரை கொல்லப்பட்டனர். இதில் பசவராஜ் என்கிற முக்கிய நக்சல் தலைவனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மீது ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் தொடரும் நடவடிக்கை
இந்த என்கவுண்டரில் ஏகே-47, தானியங்கி ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், கிலோ கணக்கிலான உணவுப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 150-க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். மே 22, 2025 (வியாழக்கிழமை) சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரின் போது சி.ஆர்.பி.எஃப்-ன் ஒரு கோப்ரோ கமாண்டோ மற்றும் ஒரு நக்சலைட்டும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சத்தீஸ்கர் மாவட்டத்தின் தும்ரேல் கிராமப் பகுதியில் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு சி.ஆர்.பி.எஃப்-ன் கோப்ராவின் 210-வது பட்டாலியன் தலைமை தாங்கி வருகிறது.
இந்த வருடம் நடந்த தாக்குதல்கள்
மார்ச் 2025-ம் ஆண்டு பிஜப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் நடந்த இரண்டு தனித்தனி என்கவுண்டர்களில் 22 நக்சலைட்டுகளும், பிப்ரவரி 2025-ல் பிஜப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 31 நக்சலைட்டுகளும், ஜனவரி 2025 பிஜப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று நக்சல்களும் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர்கள் நக்சல்கள் இல்லாத இந்தியாவை நோக்கிய முக்கிய படியாக கருதப்படுகிறது.