மலேரியாவுக்கு மரண அடி! இந்தியாவிலேயே தயாராகும் AdFalciVax தடுப்பூசி!
இந்திய ஆராய்ச்சியாளர்கள் 'அட்ஃபால்சிவேக்ஸ்' என்ற புதிய மலேரியா தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். இது மலேரியா ஒட்டுண்ணியின் இரண்டு கட்டங்களை குறிவைத்து, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

புதிய மலேரியா தடுப்பூசி
இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதிய மலேரியா தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), அதன் புவனேஷ்வரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (RMRCBB), தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் (NIMR) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை - தேசிய நோய்த்தடுப்பு நிறுவனம் (DBT-NII) ஆகியவை இணைந்து, 'அட்ஃபால்சிவேக்ஸ்' (AdFalciVax) என்ற ஒரு புதிய மலேரியா தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இது மலேரியா ஒழிப்பு முயற்சியில் இந்தியாவின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அட்ஃபால்சிவேக்ஸின் தடுப்பூசியின் செயல்பாடு
மலேரியாவின் மிகவும் ஆபத்தான வடிவமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium falciparum) ஒட்டுண்ணியின் இரண்டு முக்கிய கட்டங்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்ட முதல் மலேரியா தடுப்பூசி 'அட்ஃபால்சிவேக்ஸ்' ஆகும். இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன், கொசுக்கள் மூலம் பரவும் ஒட்டுண்ணியின் சமூக பரவலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்தத் தடுப்பூசி அதன் மேம்பாட்டு கட்டத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள ஒற்றை-நிலை தடுப்பூசிகளை விட 'அட்ஃபால்சிவேக்ஸ்' கூடுதல் நன்மைகளைக் கொண்டதாக இருக்கும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தடுப்பூசி மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணியின் இரண்டு கட்டங்களை குறிவைக்கிறது. இதனால் நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். ஒன்பது மாதங்களுக்கும் மேலாக செயல்படும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.
தடுப்பூசியின் உற்பத்தி அணுகுமுறை
'அட்ஃபால்சிவேக்ஸ்' என்பது லாக்டோகோகஸ் லாக்டிஸ் (Lactococcus lactis) இல் தயாரிக்கப்படும் பல-நிலை தடுப்பூசியாகும். இது தனிப்பட்ட மனிதர்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சமூக பரவலைக் குறைக்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுண்ணியின் இரண்டு முக்கிய நிலைகளை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, உலகளவில் மிகவும் மேம்பட்ட மலேரியா தடுப்பூசி மருந்துகளில் ஒன்றாகும். இந்தத் தடுப்பூசி, இரட்டைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஆன்டிஜெனிக் கூறுகளைக் கொண்டுள்ளது.
'அட்ஃபால்சிவேக்ஸ்' தடுப்பூசியை மேலும் மேம்படுத்துவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தகுதியான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ICMR தேர்வு செய்யும். அவர்களுடன் ஒப்பந்தம் மூலம் உரிமம் வழங்கப்படும்.
மலேரியா ஒழிப்பு
'மேக் இன் இந்தியா' (Make in India) கொள்கையை பூர்த்தி செய்யும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசி ‘அட்ஃபால்சிவேக்ஸ்’. இது நோய்த்தொற்றைத் தடுப்பதன் மூலமும், சமூக பரவலைக் குறைப்பதன் மூலமும் மலேரியா ஒழிப்புக்கு கணிசமாக பங்களிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
குறிப்பு: இந்தத் தகவல் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி ஆரம்ப நிலை ஆராய்ச்சியில் உள்ளது. எந்த ஒரு மருத்துவ பயன்பாட்டிற்கோ விற்பனைக்கோ இன்னும் கிடைக்கவில்லை.