டைட்டானியம் உற்பத்தியில் உலக சாதனை! இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய சகாப்தம்!
இந்தியா டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. PTC இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரம்மோஸ் ஏவுகணைக்குத் தேவையான டைட்டானியத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் இந்தியா உலக அரங்கிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் டைட்டானியம் உற்பத்தி
டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் (கலப்பு உலோகங்கள்) போன்ற மிக முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்யும் உலகின் ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதிலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உபகரணங்களை உருவாக்க வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதை குறைப்பதிலும் இந்திய பாதுகாப்புத் துறையின் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
PTC இண்டஸ்ட்ரீஸ்
லக்னோவை மையமாகக் கொண்ட PTC இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கு அவசியமான டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்த பிரம்மோஸ் ஏவுகணைக்கு இந்த பொருட்கள் மிக முக்கியமானவை.
இந்த அதிநவீன டைட்டானியத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைவதற்கு முன்பு, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே இந்த முக்கிய உற்பத்தித் திறனைப் பெற்றிருந்தன.
இதுபற்றி PTC தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சச்சின் அகர்வால் கூறுகையில், "போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கட்டுவதற்கு டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த திறன்களும் தொழில்நுட்பங்களும் இதற்கு முன் எங்களிடம் இல்லை, வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களிடமும் திறன்களும் தொழில்நுட்பங்களும் உள்ளன." என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சீனா அரிதான கனிமப் பொருட்களின் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்து இந்தியாவை மிரட்டியதை சுட்டிக்காட்டிய அவர், "முக்கியமான உற்பத்திக் கூறுகள் மற்றும் தொழில்நுட்பங்களில் உள்ள இடைவெளியைக் குறைப்பதே எங்கள் நோக்கம். இதனால் வேறு எந்த நாடும் இந்தியாவை மிரட்ட முடியாது" என்று கூறினார். டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே தனியார் துறை நிறுவனம் PTC இண்டஸ்ட்ரீஸ் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
டைட்டானியம்: இந்தியாவின் தற்சார்புக்கு வலுசேர்க்கும் உலோகம்
டைட்டானியம் என்பது எஃகை விட லேசான, அதிக வலிமை கொண்ட மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட ஓர் உலோகம். அதன் அதிக வலிமை, லேசான எடை, அரிப்பு எதிர்ப்பு மற்றும் அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறன் காரணமாக இது விமான உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பண்புகள், எரிபொருள் திறன் மற்றும் ஒட்டுமொத்த விமான செயல்திறனுக்கு மிகவும் பயனுள்ளது. எஞ்சின் பாகங்களைச் செய்வதற்கும் இவை ஏற்றவை.
ரஷ்யாவின் டைட்டானியம் உற்பத்தி
2022 இல் ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, இந்தியா பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான ஒரு லட்சியப் பாதையை வகுத்துள்ளது. பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் பலமுறை இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை வலியுறுத்தி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டைட்டானியம் உற்பத்தி செய்யும் ஐந்து நாடுகளில், ரஷ்யா ஆண்டுக்கு சுமார் 1,75,000 டன்கள் உற்பத்தி செய்கிறது, இது உலக உற்பத்தியில் 35 சதவீதமாக உள்ளது.
1500 டன்கள் உற்பத்தி
PTC இண்டஸ்ட்ரீஸில் தற்போது, 1500 டன்கள் டைட்டானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. “இந்த ஆண்டின் இறுதிக்குள், ஆலையின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 6,000-6,500 டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது" என அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் தர இயக்குநர் அலோக் அகர்வால் தெரிவிக்கிறார்.
இந்தியா டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் உற்பத்தியில் அடைந்துள்ள இந்த முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகிறது.