- Home
- இந்தியா
- Indian Railways: சொம்பு தூக்கி ஓடிய பயணி.. கடுப்பாகி எழுதிய கடிதம்! ரயிலில் டாய்லெட் வந்த சுவாரஸ்ய வரலாறு!
Indian Railways: சொம்பு தூக்கி ஓடிய பயணி.. கடுப்பாகி எழுதிய கடிதம்! ரயிலில் டாய்லெட் வந்த சுவாரஸ்ய வரலாறு!
Indian Railways: ரயில்களில் டாய்லெட் வந்த சுவாரஸ்யமான வரலாறு உங்களுக்கு தெரியுமா? அதுவும் ஒரு பயணி தான் இதற்கு முழு காரணமாக இருந்துள்ளார். அந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரயிலில் டாய்லெட் வந்த சுவாரஸ்யமான கதை
இந்தியாவில் தொலை தூரங்களுக்கு களைப்பின்றியும், வசதியாகவும் பயணம் செய்ய ரயில்கள் உதவிகரமாக உள்ளன. ரயில்களில் டாய்லெட் உள்ளதால் நமது பயணம் மிகவும் எளிதாகி விடுகிறது. ஆனால், இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட முதல் 50 ஆண்டுகளுக்கு ரயில்களுக்குள் கழிப்பறை வசதியே இல்லை. ரயில்களில் டாய்லெட் எப்போது கொண்டு வரப்பட்டது? ரயில்களில் டாய்லெட் எப்படி வந்தது? என்பதற்கான பிண்ணனியில் ஒரு சுவாரஸ்யமான கதையே உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
1853-ஆம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷாரால் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும், பயணிகள் பயன்பாட்டிற்கான அடிப்படை வசதிகள் ரயில்களுக்குள் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பயணிகள் அடுத்த ரயில் நிலையம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் பல நேரங்களில் பயணிகள் ரயிலைத் தவறவிடும் சூழலும் ஏற்பட்டது.
ரயிலில் டாய்லெட் வர காரணமாக இருந்த ஓகில் சந்திர சென்
இந்த நிலையை முற்றிலும் மாற்றியமைத்தது 1909-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தான். ஓகில் சந்திர சென் (Okil Chandra Sen) என்ற பயணி மேற்கு வங்கத்தில் உள்ள அகமத்பூர் ரயில் நிலையம் வழியாக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென வயிறு உபாதை ஏற்படவே, உடனடியாக ஸ்டேஷனில் இறங்கி கழிப்பறைக்குச் சென்றார்.
அவர் திரும்புவதற்குள் ரயில் கிளம்புவதற்கான விசிலை கார்டு ஊதிவிட்டார். பதறியடித்த ஓகில் சந்திர சென், ஒரு கையில் வேட்டியையும் மறுகையில் சொம்பையும் பிடித்துக்கொண்டு ஓடிவந்து ரயிலைப் பிடிக்க முயன்றார். ஆனால், பயணிகள் அனைவரின் முன்னிலையிலும் ரயில் அவர் கண்ணெதிரே புறப்பட்டுச் சென்றது.
வரலாற்றை மாற்றிய புகார் கடிதம்
இதனால் பெரும் அவமானமும் கோபமும் அடைந்த ஓகில் சந்திர சென், சாஹிப்கஞ்ச் ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒரு காரசாரமான கடிதம் எழுதினார். அதில் தனது அவஸ்தையை விவரித்ததோடு, பயணிகள் நலனில் அக்கறையில்லாமல் ரயிலைக் கிளப்பிய கார்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் இச்சம்பவத்தைப் பத்திரிகைகளில் புகாராக வெளியிடுவேன் என்றும் எச்சரித்தார்.
அவரது நகைச்சுவையான அதே சமயம் நியாயமான கோப வெளிப்பாட்டைக் கண்ட ரயில்வே அதிகாரிகள், அக்கோரிக்கையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டனர்.
ரயிலில் டாய்லெட் வந்தது
இக்கடிதத்தின் விளைவாக, 1909-ஆம் ஆண்டிலேயே 50 மைல்களுக்கு மேல் பயணிக்கும் அனைத்து ரயில்களிலும் கழிப்பறை வசதியை அறிமுகப்படுத்த பிரிட்டிஷ் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்திய ரயில்வே வரலாற்றையே புரட்டிப்போட்ட ஓகில் சந்திர சென்னின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கடிதத்தின் நகல், இன்றளவும் புதுடெல்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் (National Rail Museum) பொதுமக்களின் பார்வைக்காகப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
சாமானியனின் குரலுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்
அக்காலத்தில் ஒரு சாதாரண இந்தியப் பயணி எழுதிய கடிதம், அன்றைய பிரிட்டிஷ் பேரரசின் ரயில்வே கொள்கையையே மாற்றியமைத்தது என்பது மிகப்பரிய ஆச்சரியமாகும். வெறும் தனிப்பட்ட புகாராகக் கடந்து செல்லாமல், பயணிகளின் ஒட்டுமொத்த அவஸ்தையையும் சுட்டிக்காட்டியதால் மட்டுமே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் சாத்தியமானது.
இன்று நாம் ரயில்களில் சொகுசாகப் பயணிக்கும் போது அனுபவிக்கும் இந்த அடிப்படை வசதிக்கு பின்னால், ஓகில் சந்திர சென் பட்ட அவமானமும், அவரின் துணிச்சலான அந்த ஒரு புகார்க் கடிதமும்தான் மூலக்காரணம் என்பதை மறுக்க முடியாது.

