- Home
- இந்தியா
- சபரிமலையில் அரை கிலோ தங்க கிரீடம் மாயம்? போலி வைக்கப்பட்டதா? தமிழக பக்தர்கள் தந்த கிரீடத்திற்கு என்னாச்சு?
சபரிமலையில் அரை கிலோ தங்க கிரீடம் மாயம்? போலி வைக்கப்பட்டதா? தமிழக பக்தர்கள் தந்த கிரீடத்திற்கு என்னாச்சு?
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள திருவாபரணங்களின் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான திருவாபரணங்களை சரிபார்க்கும் குழு ஆய்வின்போது 55 சவரன் தங்கக் கிரீடத்துக்கு பதிலாக போலி கிரீடம் இருந்தது அம்பலம்.

சபரிமலையில் அரை கிலோ தங்கக் கிரீடம் மாயமா?
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டிருந்த சுமார் அரை கிலோ மதிப்பிலான அசல் தங்கக் கிரீடம் மாயமாகி, அதற்குப் பதிலாக போலி கிரீடம் வைக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கணக்கெடுப்பில் சிக்கிய மர்மம்: பின்னணி என்ன?
கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நீதிமன்றத்தின் 'அமிகஸ் கியூரி' (Amicus Curiae) ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களின் கணக்கெடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த கிரீடத்தை ஆய்வு செய்தபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாக, அதே வடிவம் கொண்ட ‘முக்குபண்டம்’ எனப்படும் போலி கிரீடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அந்த போலி கிரீடத்தில் வைரம் போன்ற வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
எடையில் பெரும் சந்தேகம்
கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று (சிங்க மாத பிறப்பு), தமிழ்நாட்டைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (CA) ஐயப்ப பக்தர்கள் குழு இந்த தங்க கிரீடத்தை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியது. ஐயப்பன் விக்கிரகத்திற்கு அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் முடிந்ததும், அது சன்னிதான ஸ்ட்ராங் ரூமிற்கு மாற்றப்பட்டது.
காணிக்கையாக வழங்கப்பட்டபோது அந்தக் கிரீடத்தின் எடை 55.72 பவுன் (445.78 கிராம்). 2012-ல் இதன் மதிப்பு சுமார் ₹26 லட்சம்; இன்றைய சந்தை மதிப்பு படி சுமார் ₹62 லட்சம். ஆனால் கணக்கெடுப்பின்போது ஸ்ட்ராங் ரூமில் கண்டறியப்பட்ட போலி கிரீடத்தின் எடை வெறும் 240 கிராம் மட்டுமே இருந்துள்ளது.
தீவிர விசாரணை உத்தரவு
தொடர்ந்து சபரிமலையில் தங்கம் தொடர்பான மோசடிப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான துறை ரீதியான விசாரணைக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள பகுதியில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்படாதது இந்த வழக்கின் புலனாய்வுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்த இறுதி அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அசல் கிரீடம் பத்திரமாக உள்ளது: திருவாபரண ஆணையர் மறுப்பு
தங்கக் கிரீடம் மாயமானதாக வெளியான தகவல்களுக்கு திருவாபரண ஆணையர் ரெஜிலால் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டு பக்தர்களின் அசல் தங்கக் கிரீடம் முழுப் பாதுகாப்புடன் உள்ளது.
கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பின் போது அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட சில நிர்வாகக் குழப்பங்களே இந்தத் தவறான தகவலுக்குக் காரணமாக இருக்கலாம், தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தரப்பில் கிரீடம் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்திருந்தாலும், அடுத்தகட்ட விரிவான விசாரணையின் முடிவிலேயே இதில் என்ன நடந்தது என்ற முழு உண்மை விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

