- Home
- இந்தியா
- ரவுண்ட் கட்டும் வடகிழக்கு பருவமழை! இன்னும் கொஞ்ச நேரத்தில் 16 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகுதாம்!
ரவுண்ட் கட்டும் வடகிழக்கு பருவமழை! இன்னும் கொஞ்ச நேரத்தில் 16 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகுதாம்!
Tamilnadu Rain: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. வானிலை மையம் இன்று விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் அதீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியது. நேற்று முன்தினம் நெல்லை, தூத்துக்குடியில் நூற்றாண்டுகளுக்கு பிறகு பெரும் மழை பெய்தது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கனமழை எச்சரிக்கை
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
16 மாவட்டங்களில் மழை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை 16 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி. மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.