குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து 9 பேர் பலி; வாகனங்கள் ஆற்றில் விழுந்தன
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் காம்பிரா-முஜ்பூர் பாலம் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. பாலம் பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாலம் இடிந்து விழுந்தது
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் உள்ள காம்பிரா-முஜ்பூர் பாலம் இன்று காலை இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மகிசாகர் (மாஹி) ஆற்றில் பல வாகனங்கள் கவிழ்ந்தன.
ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் இந்தப் பாலம், காலை உச்சகட்ட போக்குவரத்து நேரத்தில் இடிந்து விழுந்தது.
உள்ளூர் மக்கள் உதவி
இரண்டு லாரிகள், ஒரு போலிரோ எஸ்யூவி மற்றும் ஒரு பிக்கப் வேன் உட்பட நான்கு வாகனங்கள் பாலத்தைக் கடக்கும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு பெரும் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் வதோதரா மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க உள்ளூர் மக்களும் உதவினர்.
மக்கள் குற்றச்சாட்டு
பத்ரா எம்எல்ஏ சைதன்யசின் ஜாலா சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். விபத்துக்களைத் தடுக்க அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பாலம், மத்திய குஜராத்தை சௌராஷ்டிராவுடன் இணைக்கும் ஒரு முக்கிய வழித்தடத்தில் உள்ளது. இது ஆனந்த், வதோதரா, பரூச் மற்றும் அங்கலேஸ்வர் இடையே பயணிப்பவர்களுக்கு மிகவும் அவசிய பாதையாகும். ஆனால் இந்த பாலம் நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மீட்புப் பணி தொடர்கிறது
“ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்துவிட்டது. பல வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன. பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு போக்குவரத்துக்குக்கு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்.” என மூத்த காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்ரா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கிரேன்கள் மூலம் ஆற்றில் மூழ்கிய வாகனங்களை மீட்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

