17 ஏழை பெண்களை சீரழித்த சாமியார்! தலைமறைவான சைதன்யானந்த சரஸ்வதிக்கு வலைவீச்சு!
டெல்லியில் உள்ள பிரபல ஆசிரமத்தின் இயக்குனரான சைதன்யானந்த சரஸ்வதி என்ற சாமியார் மீது 17 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

சைதன்யானந்த சரஸ்வதி
டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமம் ஒன்றின் இயக்குனர் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற்று படித்து வருகின்றனர்.
இங்கு முதுநிலை நிர்வாகத்திற்கான டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள், பார்த்தசாரதி ஆபாசமாக பேசுதல், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல், மற்றும் உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
சாமியாரின் டார்ச்சர்
மாணவிகளின் புகாரின்படி, சாமியாரின் வற்புறுத்தலுக்கு இணங்க, பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் கூட மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி இந்த பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சில ஆசிரம வார்டன்கள் மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர். மாணவிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தீவிர விசாரணை
டெல்லி தென்மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் அமித் கோயல் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஆசிரம நிர்வாகம் பார்த்தசாரதியை அவரது பதவியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.