டெல்லியில் சுகாதாரப் பணியாளர் கிரண் ஜா படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பிரிந்த கணவர் பிரமோத் ஜா சாமியார் வேடத்தில் வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்திருக்கலாம் என சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியின் நெப் சராய் பகுதியில் உள்ள வீட்டில், சுகாதாரப் பணியாளர் கிரண் ஜா என்பவர் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது பிரிந்த கணவரே காரணம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெப் சராய் பகுதியில் வசித்து வந்தவர் கிரண் ஜா. நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் அவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிரணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி வீடியோ

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிரண் ஜா 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் பிரமோத் ஜா என்பவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. கிரண் தனது மகன் துர்கேஷ் ஜா, மருமகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று துர்கேஷ் ஜா, தனது நிதி நிறுவன வேலை காரணமாக பீகார் மாநிலத்தின் தர்பங்கா பகுதியில் இருந்துள்ளார். இதனால், வீட்டில் கிரண் மட்டும் இருந்துள்ளார்.

வீட்டுக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை வேளையில் பிரமோத் ஜா கிரணின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரது அடையாளம் தெரியாமல் இருக்க தலையை மொட்டையடித்து, சாமியார் வேடத்தில் அவர் வந்திருப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

சுத்தியல் பறிமுதல்

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பீகாரின் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் ஜா சமீபத்தில் டெல்லிக்கு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட சுத்தியல் ஒன்று சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. சொத்துத் தகராறு அல்லது தனிப்பட்ட காரணங்களால் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரமோத் ஜாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.