தீபாவளி ஷாப்பிங்கில் பில்லை பிரித்தால் ஜிஎஸ்டி வரி குறையுமா? உண்மை என்ன?
தீபாவளி ஷாப்பிங்கில் ஆடைகளுக்கான ஜிஎஸ்டி மொத்த பில் தொகையில் விதிக்கப்படுவதாகப் பரவும் தகவல் தவறானது. ஒவ்வொரு ஆடையின் விலைக்கும் (₹2,500 வரை 5%, அதற்கு மேல் 18%) தனித்தனியாகவே ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, எனவே பில்லைப் பிரிப்பதால் வரி குறையாது.

தீபாவளி ஷாப்பிங்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மாற்றம் கொண்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், "₹2,500-க்குள் ஆடைகள் வாங்கினால் 5% ஜிஎஸ்டி; ₹5,000-க்கு மேல் வாங்கினால் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்" என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.
பில் தொகையை பிரித்தால் லாபமா?
தீபாவளிக்கு ஆடை வாங்குபவர்கள் பில் தொகையைப் பிரித்துப் போட்டு வாங்கினால் வரி குறையும் என்ற வதந்தியும் பரவி வருகிறது. உண்மையில் இது தேவையில்லாத வதந்தி என்றும், இது முற்றிலும் தவறான செய்தி என்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பது எப்படி?
ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்துப் பரவி வரும் தவறான தகவல்களை மறுத்து, நிபுணர்கள் பின்வருமாறு உண்மையான நடைமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
• ஜிஎஸ்டி என்பது மொத்த பில்லின் அடிப்படையில் விதிக்கப்படுவதில்லை. மாறாக, ஒவ்வொரு தனிப்பட்ட ஆடைக்கும் (per-piece basis) அதன் விலையின் அடிப்படையில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
• அதன்படி, ₹2,500 வரை விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும் (தனிப்பட்ட துணிக்கு), 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
• ₹2,500-ஐ விட அதிக விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும் (தனிப்பட்ட துணிக்கு), 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ₹2,000 மதிப்புள்ள ஒரு சட்டையை வாங்கினால், அதற்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும். அத்துடன், நீங்கள் ₹3,000 மதிப்புள்ள ஒரு பட்டுப் புடவையையும் சேர்த்து வாங்கினால், அந்தப் புடவைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
எனவே, நீங்கள் ஒரே பில்லில் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கினாலும், ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விலைக்கேற்பத் தனித்தனியாகவே ஜிஎஸ்டி கணக்கிடப்படும்.
வதந்தியை நம்ப வேண்டாம்
"ரூ.5000-க்கு ஆடைகள் வாங்கினால், பில் தொகையைப் பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும்" என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது.
ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை, மொத்த பில்லின் அடிப்படையில் வரி விதிக்கப்படுவதில்லை என்பதால், பில் தொகையைப் பிரிப்பதாலோ அல்லது பல கடைகளில் வாங்குவதாலோ வரியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.