16 வயது முஸ்லிம் சிறுமி திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
16 வயது முஸ்லிம் சிறுமியின் திருமண வழக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து NCPCR செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாதுகாப்பு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முஸ்லிம் சிறுமியின் திருமணம்
முஸ்லிம் சிறுமியின் திருமணம் தொடர்பான வழக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, குழந்தைகளுக்கான தேசிய ஆணையம் (NCPCR) தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, 16 வயதான முஸ்லிம் சிறுமி, 30 வயது இளைஞரைத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அந்த தம்பதிக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, குழந்தைகளுக்கான தேசிய ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, தம்பதிக்கு பாதுகாப்பு வழங்கிய உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகளின் சரமாரி கேள்விகள்
நீதிபதிகள் கூறுகையில், "குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வர உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதில், குழந்தைகள் நல ஆணையத்திற்கு என்ன பிரச்னை? இது போன்ற தேவையற்ற வழக்குகளைத் தாக்கல் செய்யக் கூடாது.
ஒரு சிறுமி, தன் விருப்பப்படி, ஒருவரைத் திருமணம் செய்து, அவரோடு வாழ்ந்து, ஒரு குழந்தையையும் பெற்றுள்ளார். இந்தச் சூழலில், நீங்கள் இந்த வழக்கை ஏன் எதிர்க்கிறீர்கள்? இத்தகைய வழக்குகள், கௌரவக் கொலைகளுக்கு வழிவகுக்கும்” என்று கண்டனம் தெரிவித்தனர்.
முஸ்லிம் தனிநபர் சட்டங்களும், உச்சநீதிமன்றமும்
முஸ்லிம் தனிநபர் சட்டங்களின்படி, 15 வயதை எட்டிய அல்லது பருவமடைந்த ஒரு பெண், திருமண வயதை எட்டியவர் ஆவார். மேலும், போக்சோ (POCSO) சட்டத்தின்படி, இது குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமை எனக் கருதப்பட்டாலும், இது ஒரு முக்கியமான சட்டரீதியான பிரச்னையாக மாறியுள்ளது.
உச்சநீதிமன்றம் கூறுகையில், "பருவ வயதினர் காதலில் விழுவது இயல்புதான். இந்தக் காதல் விவகாரங்களை, குற்றச் செயல்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமே, இந்த வழக்கின் நோக்கம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், “காதல் விவகாரங்களை குற்றச் செயல்களாக மாற்றி, பொய் வழக்குகள் போடுவது கௌரவக் கொலைகளுக்கு வழி வகுத்து விடும்" என்று நீதிபதி எச்சரித்தார்.
மூன்று மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
இதேபோன்ற மூன்று மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற காதல் விவகார வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டாம் எனவும், குழந்தைகளுக்கான நல ஆணையம் (NCPCR) முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
குழந்தைகளுக்கான நல ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, “சட்ட விவகாரங்களை, திருமண வயதை எட்டாத ஒரு பெண் திருமணத்தில் ஈடுபடுவது குறித்து ஆய்வு செய்ய, இந்த வழக்கை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று கோரினார். எனினும், உச்சநீதிமன்றம் இதை ஏற்கவில்லை.